ஆஸ்திரேலியாவில் பர்காவிற்கு தடையில்லை: நாடாளுமன்ற விவாதத்தில் பதில்!
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், அமைச்சர் ஒருவர் பர்கா அணிந்துவந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமிய மற்றும் இடம்பெயர்தலுக்கு எதிரான ஒரு தேசம் கொள்கையைக் கொண்ட கட்சியைச் சேர்ந்தவர் பவுலின் ஹேன்சன். இவர் நேற்று நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் பர்கா அணிந்துவந்து 10 நிமிடங்களுக்கும் மேலாக அமர்ந்திருந்தார். பின்னர் அதனைக் கழற்றி வீசிவிட்டு, ஆஸ்திரேலிய பாதுகாப்பு தளங்களில் பர்கா மாதிரியான உடைகள் தடைசெய்யப் படவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அட்டார்னி ஜெனரல் ஜார்ஜ் பிராண்டிஸ் இந்த நாட்டில் பர்காவிற்கு தடைவிதிக்க முடியாது. பவுலினின் உரை ஆஸ்திரேலியாவில் உள்ள சிறுபான்மையினருக்கு எதிரானது என பதிலளித்தது, அவையில் பலதரப்பினரிடமும் கைத்தட்டல்களைப் பெற்றது.
அவை அதிபர் ஸீடீபன் பெர்ரி பேசுகையில், பவுலின் பர்கா அணிந்து வந்தாலும், அவரது அடையாளம் சரிபார்க்கப்பட்ட பின்புதான் அவைக்குள் அனுமதிக்கப்பட்டார் என கிண்டலடித்ததும் வரவேற்பைப் பெற்றது.
ஆஸ்திரேலியா பலதரப்பட்ட கலாச்சாரங்களை ஒருங்கிணைத்து செயல்படும் நாடு. சமீபத்தில் தமிழ் ஆஸ்திரேலியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டதும் கவனிக்கத்தக்கது. தற்போது சிறுபான்மையினருக்கு எதிராக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும், அவர்களின் நலன் சார்ந்து விவாதித்திருப்பது அனைவரிடத்திலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
- ச.ப.மதிவாணன்