ஐநா பொதுக்குழு கூட்டத்தை தவிர்த்த ஆங் சான் சுகி!
மியான்மர் நாட்டில் ரோஹிங்யா முஸ்லிம்களின் மீது தொடர் தாக்குதல்கள் நடந்துவரும் நிலையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறவிருக்கும் ஐநா பொதுக்குழு கூட்டத்தில் மியான்மர் தேசிய தலைவர் ஆங் சான் சுகி கலந்துகொள்ள மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி மியான்மரின் ராக்கைன் பகுதியில் ரோஹிங்யா கிளர்ச்சியாளர்கள் காவல்துறை முகாம்களில் தாக்குதல்கள் நடத்தினர். இதையடுத்து மியான்மரின் பாதுகாப்புப் படையினர் ரோஹிங்யா முஸ்லிம்களின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு அஞ்சி இதுவரை 4 லட்சம் ரோஹிங்யாக்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்றுள்ளனர். பல ரோஹிங்யாக்கள் தங்குவதற்கு முகாம்கள் இல்லாமல் திறந்தவெளிகளில் தங்கிவருகின்றனர்.
இந்த விவகாரங்களில் துரித நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், மியான்மரின் தேசிய தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான ஆங் சான் சுகி மீது சர்வதேச அளவில் கண்டனக்குரல்கள் எழுந்து வருகின்றன. அவரது நோபல் பரிசை திரும்ப அளிக்கும் படியும் முழக்கங்கள் எழுந்துவருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறவிருக்கும் ஐநா பொதுக்குழு கூட்டத்தில் மியான்மர் தேசிய தலைவர் ஆங் சான் சுகி கலந்துகொள்ளமாட்டார் என அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், விமர்சனங்களையும், பிரச்சனைகளையும் எதிர்கொள்ள சுகி ஒருபோதும் அஞ்சியதில்லை என தெரிவித்துள்ளார். ஆனால், ஏன் அவர் கலந்துகொள்ளவில்லை என்ற முறையான காரணம் எதுவும் அவர் தெரிவிக்கவில்லை.
- ச.ப.மதிவாணன்