பொருளாதார நிலை மோசமாக இருப்பதால், வெளிநாட்டு கடன்களைத் திரும்பச் செலுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
கடுமையான பொருளாதாரச் சிக்கலில் இலங்கை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தனது வெளிநாட்டு கடன்கள் குறித்த இடைக்காலக் கொள்கையை அந்நாட்டு நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில், கரோனா பொது முடக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து, நடந்து வரும் உக்ரைன், ரஷ்யா போரால் தங்கள் பொருளாதாரம் பெரும் நலிவடைந்துள்ளது. இதன் காரணமாக, சர்வதேச மூலதன சந்தைகளில் பெற்ற கடன், வெளிநாட்டு அரசுகளிடம் பெற்ற கடன், வெளிநாட்டு வங்கிகளிடம் பெற்ற கடன் உள்ளிட்ட கடன்களையும், அவற்றிற்கான வட்டியையும் திரும்ப செலுத்துவது ஒத்திவைக்கப்படுகிறது. பொருளாதார சிக்கல்களில் இருந்து மீள்வதற்காக கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இது தொடர்பாக, சர்வதேச நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இவ்வாறு இலங்கை நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு தற்போதைய நிலையில், 3,80,000 கோடி ரூபாய் வெளிநாட்டு கடன் உள்ளது. இலங்கை திவால் நிலைக்கு ஆளாகும் என ஏற்கனவே எச்சரிக்கைகளும் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் பொருளாதார சிக்கலில் இருந்து மீள்வதற்கான இறுதி முயற்சியை இலங்கை அரசு தற்போது தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.