கல்வி கற்பதற்கு காலம், வயது என எந்தவிதத் தடைகளும் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது மெக்சிகோவில் நடைபெற்றிருக்கும் நிகழ்வு ஒன்று.
மெக்சிகோ நாட்டில் உள்ள பழைமையான கிராமத்தில் வறுமை மட்டும் மிஞ்சிய குடும்பத்தில் பிறந்தவர் குவாதுலப் பலேசியோஸ். இவர் தனது குழந்தைப் பருவத்தை பெற்றோருக்கு விவசாயத்தில் உதவுவதற்காகவும், இளமைக் காலத்தை சந்தையில் சிக்கன் விற்கவும் மட்டுமே செலவழித்துவிட்டார்.
தனது வாழ்வில் இரண்டு முறை திருமணம் செய்துகொண்ட பலேசியோஸ், ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்தார். இத்தனை காலம் தான் பார்த்த வேலைகளின் மூலம் கணக்குகளை சரியாக செய்யமுடிந்தாலும், அவருக்கு எழுதப்படிக்கத் தெரியாது.
காலம் மெல்லமெல்ல நகர, தனக்கு இதுதான் கல்விகற்க சரியான நேரம் என்பதை உணர்ந்தபோது பலேசியோஸ் 92 வயதைக் கடந்திருந்தார். இருந்தாலும் விடாமுயற்சியின் பயனாய் கடந்த 2015ஆம் ஆண்டு தனது பள்ளிப் படிப்பைத் தொடங்கி, வெறும் நான்கு ஆண்டுகளில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வகுப்புகளை வெற்றிகரமாக முடித்தார். இதோடு முடிந்துவிட்டதா பயணம் என்று கேட்டால் அதுதான் கிடையாது. பலேசியோஸ் மெக்சிகோவில் உள்ள சியாபஸ் நகரில் தனது மேல்படிப்பைத் தொடங்கியிருக்கிறார். வெள்ளை போலோ பனியன், கறுப்பு பாவாடை என சீறுடையில் சென்ற அவருக்கு, அவரைவிட 80 வயது சிறிய மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
‘இனி என் ஆண் நண்பர்களுக்கு நான் காதல் கடிதம் தீட்டுவேன்’ என சுருக்கம் விழுந்த முகத்துடன் பிரகாசமாக சிரிக்கிறார் பலேசியோஸ். நூறாவது வயதில் கிண்டர்கார்டன் பள்ளி டீச்சராவேன் எனும் கனவுகளோடு நடைபோடுகிறார் இந்த தன்னம்பிக்கை பாட்டி.