இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
முன்னதாக தமிழ்நாட்டு அரசு சார்பில், இலங்கை மக்களுக்கு '40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர், உயிர்காக்கும் மருந்துகள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இலங்கையில் வாழும் மக்களுக்கு உதவும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டிய தருணம் இது. இதற்காக நன்கொடை வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திமுக தலைமை, ‘‘நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இலங்கை மக்களுக்கு உதவிட முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும். இத்துடன், திராவிட முன்னேற்றக் கழகச் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும்’’ என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் 3-5-2022 அன்று வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து; தி.மு.கவின் நாடாளுமன்ற மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கிடுவர் என அறிவித்துள்ளது.