Skip to main content

அமெரிக்கா பொதுத் தேர்தல்; டொனால்ட் ட்ரம்புக்கு விதிக்கப்பட்ட மற்றொரு தடை

Published on 30/12/2023 | Edited on 30/12/2023
Another ban on Donald Trump for US General Election

குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட்  ட்ரம்ப், அமெரிக்க அதிபராக கடந்த 2016 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நடந்த 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார்.

இதையடுத்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனிடம் ஆட்சி பொறுப்பை வழங்குவதற்கு வழிவகை செய்யும் வெற்றிச் சான்றிதழ் அளிப்பு நிகழ்ச்சி நாடாளுமன்றத்தில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது அந்த நிகழ்ச்சியை நடத்த விடாமல், டிரம்ப்பின் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகை முன்னால் நின்று கலவரத்தில் ஈடுபட்டனர். அவர்களை விரட்டியடிக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். ஒட்டுமொத்த அமெரிக்காவையும் உலுக்கிய இந்த கலவரத்தில் டொனால்ட் ட்ரம்ப்புக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், அந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக டிரம்ப் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

அதனைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையை விட்டு டிரம்ப் வெளியேறிய பின்பு, அமெரிக்கா அரசின் ரகசிய ஆவணங்களை அவர் எடுத்துச் சென்றதாகக் குற்றச்சாட்டும் எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் அதிபர் டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள நீதிமன்றங்களில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அந்த வகையில், கொலராடோ மாகாணத்தின் நீதிமன்றத்திலும் நாடாளுமன்ற கலவரம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் கொலராடோ நீதிமன்றம் கடந்த 19ஆம் தேதி பரபரப்பு தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது. அதில், அடுத்த ஆண்டு 2024இல் நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிட டிரம்புக்கு தகுதி இல்லை என்ற பரபரப்பு தீர்ப்பை வழங்கியது

மேலும், குடியரசு கட்சியின் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் தேர்தலின் வாக்குச் சீட்டில் டிரம்ப்பின் பெயர் இடம் பெறக்கூடாது என்றும், அவ்வாறு இடம்பெற்றால் அவருக்கு அளிக்கும் வாக்கு செல்லாது என்றும் தெரிவித்தது. 

இந்த நிலையில், கொலராடோ மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து மைனே மாகாணத்திலும் அமெரிக்கா அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் போட்டியிட தடை விதித்துள்ளது. இது தொடர்பாக மைனே வெளியுறவுத்துறை அமைச்சர் ஷென்னா பெல்லோஸ் கூறுகையில், “குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்தலில் மைனே மாகாணத்திலும் டிரம்ப் போட்டியிட தடை விதிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் அஸ்திவாரங்கள் மீதான தாக்குதலை அமெரிக்க அரசியலமைப்பு பொறுத்துக் கொள்ளாது. நாடாளுமன்ற வன்முறைகள், டிரம்பின் அறிவுறுத்தலின் பேரிலும், ஆதரவுடன் தான் நிகழ்ந்துள்ளன” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்