அமெரிக்க அரசு அந்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் வகையில் ஹெச்1பி விசாவில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த எக்ஸ்ட்ரா சொலியூசன்ஸ் என்ற மென் பொருள் நிறுவனம் அமெரிக்கா அரசின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் தங்கள் நிறுவனத்திற்கு இந்தியாவை சேர்ந்த சந்திர சாய் என்ற 28 வயது இளைஞரை சிஸ்டம் அனாலிஸிஸ்ட் என்னும் பணிக்கு தேர்வு செய்தோம். மேலும் அவர் அமெரிக்காவிற்கு வந்து பணி செய்வதற்கு தங்கள் நிறுவனம் சார்பில் ஹெச்1பி விசா நடைமுறையில் சந்திர சாய்க்கு விசா விண்ணப்பித்திருந்தோம். ஆனால், ஹெச்1பி விசாவுக்கு ஏற்ற தகுதிகள் நிறைவாக இல்லாததால் அவரது விசா விண்ணப்பத்தை ஏற்க அமெரிக்க அரசு மறுக்கப்பட்டது. இதையடுத்து, திறமை மிகுந்த ஒரு பொறியாளரை தகுதி நீக்கம் செய்ததில் போதிய விளக்கம் அளிக்கவில்லை என தனது மனுவில் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவில் பணியாற்ற விரும்பும் வெளிநாட்டினர் குறிப்பிட்ட ஒரு துறையில் நிபுணராகவோ திறன் மிக்கவராக இருந்தால் அந்த நபருக்கு ஹெச்1பி விசாவின் கீழ் அமெரிக்காவிலேயே பணியாற்றுவதற்கான விசா வழங்கப்படுவது வழக்கம். இந்திய இளைஞருக்கு ஹெச்1பி விசாவை அமெரிக்க அரசு வழங்க மறுத்ததன் மூலம் மற்ற இந்திய மற்றும் அமெரிக்க மென்பொருள் நிறுவனங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன. ஏதேனும் ஒரு காரணத்தை காட்டி வெளிநாட்டு பொறியாளர்களுக்கு ஹெச்1பி விசா விண்ணப்பத்தை நிராகரிக்கும் அமெரிக்கா அரசின் நடவடிக்கை தொடரலாம் எனவும், இது அமெரிக்கா இளைஞர்களை முதற்கட்டமாக பணியில் அமர்த்தும் அமெரிக்க அரசின் ராஜதந்திர நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.