நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுத்தது. இந்த போரில் உக்ரைன் நாட்டின் பெரும்பாலான முக்கிய நகரங்கள் உருக்குலைந்தன. மேலும் நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளும் சிதைக்கப்பட்டன.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மூன்று நாள் பயணமாக உக்ரைனின் அண்டை நாடான போலந்துக்கு சென்றார். அங்கு சென்ற அவர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீர் பயணமாக நேற்று உக்ரைன் தலைநகர் கிவ்வுக்கு சென்றார். இரு நாடுகளின் போர்களுக்கு இடையே அமெரிக்க அதிபர் உக்ரைன் சென்றது உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, உலக நாடுகளின் கவனத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பக்கம் திருப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜோ பைடன் பேசுகையில், " ரஷ்யா போர் தொடுக்கையில் விரைவில் உக்ரைன் தலைநகர் கிவ் நகரை கைப்பற்றி விடும் என்று நினைத்தேன். ஆனால் கிவ் இன்னும் வலுவாக உள்ளது. ஜனநாயகம் விழாமல் நிற்கிறது. உக்ரைனுடன் அமெரிக்காவும், உலகமும் துணை நிற்கும். உக்ரைனை எளிதில் வீழ்த்தி விடலாம் என்ற ரஷ்ய அதிபர் புதினின் கனவுகள் தவிடு பொடியாக்கப்பட்டுள்ளன. புதினின் எண்ணம் தவறானது. உலக வரைபடத்தில் இருந்து உக்ரைனை அழித்து விடலாம் என நினைக்கிறார். ஆனால் அவர் தோல்வியை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறார்.போரின் கடைசி வரைக்கும் உக்ரைனுக்கு அமெரிக்காவும், உலக நாடுகளும் துணை நிற்கும். போரினால் உக்ரைன் பல தியாகங்களை செய்துள்ளது" என்றார்.