இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 170 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,761 உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில், இந்தியாவில் கரோனா தீவிரமாக பரவி வருவதால், அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு தங்கள் நாட்டு மக்களை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், தற்போதுள்ள நிலையில் இந்தியாவில், கரோனா தடுப்பூசிகளை முழுவதுமாக செலுத்திக்கொண்ட (இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்ட) பயணிகள் கூட கரோனா தொற்றால் பாதிக்கப்படுவதற்கும், அதனை பரப்புவதற்குமான ஆபத்து இருப்பதால், இந்தியாவிற்கு செல்லவிருக்கும் அனைத்து விதமான பயணங்களையும் தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியாவிற்கு கட்டாயம் செல்ல வேண்டுமென்றால், தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை செலுத்திக்கொள்ள வேண்டும், முகக் கவசம் அணிய வேண்டும், 6 அடி தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், கூட்டத்தை தவிர்க்க வேண்டும், கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.