மக்களுக்கு கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கரோனா தடுப்பூசி கண்டறியும் ஆராய்ச்சிகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் பிரபல மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகா இணைந்து தயாரித்துள்ள மருந்து உலகம் முழுவதும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மருந்தின் இறுதிகட்ட பரிசோதனைகள் நடைபெற்று வரும் நிலையில், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்துடன் ஆஸ்திரேலிய அரசு, அந்த தடுப்பூசிக்காக 18 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய அந்நாட்டுப் பிரதமர் மோரிசன், "இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற சோதனை வெற்றி அடைந்தால், நாம் அதை உற்பத்தி செய்வோம். அதன்மூலம் நாமே விநியோகிக்கலாம். 2½ கோடி ஆஸ்திரேலிய மக்களுக்கு அந்த தடுப்பூசி இலவசமாக போடப்படும்" எனத் தெரிவித்துள்ளார். தங்கள் நாட்டு மக்களுக்கு கரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அமெரிக்கா ஏற்கனவே அறிவித்திருக்கும் நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.