ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸின் தாக்கம் இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களைப் பாதித்துள்ளது, லட்சக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்துள்ளது. இதுவரை சிகிச்சைக்கான அங்கீகரிக்கப்பட்ட சரியான மருந்துகள் எதுவும் கண்டறியப்படாத நிலையில், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், சுய சுகாதாரத்தைப் பேணுதல் ஆகியவற்றின் மூலமே இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என அறிவுறுத்தப்படுகிறது.
இந்நிலையில் குழந்தைகளுக்கு முகக் கவசங்கள் அணிவித்தல் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, "ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை. அதேநேரம் 6 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அந்தந்த சூழலைப் பொறுத்து முகக்கவசம் அணியலாம். அதாவது அவர்கள் வசிக்கும் பகுதியில் கரோனா பரவல் உள்ளிட்டவற்றைப் பொறுத்து முகக்கவசம் அணிய வேண்டும். 12-வயதிற்கு மேற்பட்ட சிறுவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதோடு, தனிமனித இடைவெளியையும் கடைப்பிடிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.