Skip to main content

வீட்டோவை பயன்படுத்திய ரஷ்யா - பொதுச்சபைக்கு நகரும் நாடுகள்!

Published on 26/02/2022 | Edited on 26/02/2022

 

unsc

 

உக்ரைன் மீது தாக்குதல் நடத்த நேற்று முன்தினம் காலை ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்ட நிலையில், ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தீவிரமான தாக்குதலை நடத்தி வருகின்றது. போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசியும், ஏவுகணைகள் மூலமும் தொடர் தாக்குதல் நடந்து வருவதால், உக்ரைன் மக்கள் மெட்ரோ நிலையங்களில் இருக்கும் வெடிகுண்டு பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

 

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர முயற்சி செய்யப்பட்டது தோல்வியடைந்துள்ளது. வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்கு எதிரான தீர்மானத்தை ரஷ்யா தோற்கடித்தது. அமெரிக்கா, அல்போனியா கொண்டுவந்த தீர்மானத்திற்கு 11 நாடுகள் ஆதரவளித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய 3 நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

 

இதனையடுத்து ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள், ஒரு கூட்டறிகையை வெளியிட்டுள்ளன. அதில், இந்த விவகாரத்தை ரஷ்யாவின் வீட்டோ அதிகாரம் செயல்படாத ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக்கு எடுத்து செல்லப்போவதாக தெரிவித்துள்ளன. மேலும் உலக நாடுகள், உக்ரைன் மீதான தாக்குதலுக்கு தொடர்ந்து ரஷ்யாவை பொறுப்பாளியாக்கும் எனவும் அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையே உக்ரைனில் இருக்கும் இந்திய தூதரகம், இந்தியர்களுக்கு புதிய அறிவுறுத்தல்களை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் உக்ரைன் எல்லை சாவடிகளில் இருக்கும் இந்திய அதிகாரிகளுக்கு தெரிவிக்காமால், யாரும் எல்லை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என  இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் மேற்கு உக்ரைன் நகரங்களில் உணவு, தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகளுடன் இருப்பது, எல்லை பகுதிகளுக்கு வருவதைவிட பாதுகாப்பானது என தெரிவித்துள்ள இந்திய தூதரகம், கிழக்கு உக்ரைனில் இருப்பவர்கள் அடுத்த கட்ட அறிவுறுத்தல் வரும்வரை தற்போது இருக்குமிடத்திலேயே இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்