ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே மனித வெடிகுண்டு தாக்குதலை நடத்திய ஐஎஸ்-கே தீவிரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா இரண்டு ட்ரோன் தாக்குதலை நடத்தியது. கடந்த 28ஆம் தேதி நடைபெற்ற முதல் ட்ரோன் தாக்குதலில், ஐஎஸ்-கே அமைப்பின் தாக்குதல்களுக்குத் திட்டம் தீட்டித் தந்தவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.
அதனைத்தொடர்ந்து கடந்த 29ஆம் தேதி கார் ஒன்றின் மீது அமெரிக்கா இரண்டாவது ட்ரோன் தாக்குதலை நடத்தியது. காபூல் விமான நிலையத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்த வந்த ஐஎஸ்-கே தீவிரவாதியைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்றதாக அமெரிக்கா முதலில் கூறியது. அமெரிக்கா நடத்திய இந்த தாக்குதலில் பொதுமக்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகின.
இதனையடுத்து, அமெரிக்கா இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தியது. அதில் ட்ரோன் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 10 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதும், தீவிரவாதிகளுடன் தொடர்புடைய யாரும் உயிரிழக்காததும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, ட்ரோன் தாக்குதலில் நடந்த தவறை ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்க சென்ட்ரல் கமாண்ட் கமாண்டர் ஜெனரல் கென்னத் மெக்கென்சி இதுதொடர்பாக கூறுகையில், "ட்ரோன் தாக்குதல் ஒரு சோகத்தையளிக்கும் தவறு என எங்களது விசாரணையில் தெரியவந்துள்ளது. நான் மிகவும் வருந்துகிறேன்" என தெரிவித்துள்ளார். மேலும் தாக்குதலில் பலியானவர்களுக்கு எந்த வகையில் நஷ்டஈடு கொடுப்பது என அமெரிக்கா யோசித்துவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேபோல் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லாயிட் ஆஸ்டின், "கொல்லப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நான் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இந்தக் கொடூரமான பிழையிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள முயற்சிப்போம்" என தெரிவித்துள்ளார்.