உலக வங்கியின் தற்போதைய தலைவராக இருந்து வருபவர் அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் மால்பாஸ். இவர் வரும் ஜூன் மாதத்துடன் தனது பதவியில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார். அவரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் அந்தப் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா என்பவரின் பெயரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அஜய் பங்காவை தவிர வேறு யாரும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்காததால் இவர் போட்டியின்றித் தேர்வானதாக அதிகாரப்பூர்வமாக உலக வங்கி அறிவித்துள்ளது. மேலும் இவர் வரும் ஜூன் மாதம் 2 ஆம் தேதியில் இருந்து அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு உலக வங்கியின் தலைவராக இருப்பார் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தான் அஜய் பங்காவின் பூர்வீகம் ஆகும். இவர் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 1959 ஆம் ஆண்டு பிறந்தார். பின்னர் டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் இளங்கலை பொருளாதாரப் படிப்பும், அதனைத் தொடர்ந்து அகமதாபாத்தில் பட்ட மேற்படிப்பும் முடித்துவிட்டு இந்தியாவில் சில ஆண்டுகள் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். அதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்குச் சென்ற இவர் சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.