
ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வருவதையொட்டி, 2006 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட, பெண்கள் ஹிஜாப் ஆடை அணிவதைக் கண்காணிக்கும் சிறப்புக் காவல் படையை ஈரான் அரசு தற்போது கலைத்துள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கடந்த செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி உறவினர்களைச் சந்திக்கச் சென்ற 22 வயதான மாஸா அம்னி என்ற பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை என்று கைது செய்யப்பட்டார். பின்னர் சிறப்புப் படை காவல் அதிகாரிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்ட அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உடலை, அவரது பெற்றோரிடம் கொடுக்காமல் காவல்துறையினரே அடக்கம் செய்ததாகவும், அதற்கு பெரும் கண்டனங்கள் எழுந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கேட்டு மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர்.
இந்த போராட்டங்களில் பங்கேற்ற பலரும், பல்வேறு காரணங்களால் உயிரிழந்த நிலையில், ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் சர்வதேச அளவில் எதிரொலித்தது. பெண் பிரபலங்கள் பலரும் பொது மேடைகளில் முடிகளைக் கத்தரித்தும், ஆடைகளைக் குறைத்தும், டிவிட்டரில் கண்டனங்களைப் பதிவிட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கத்தாரில் நடைபெற்று வரும் பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில், இங்கிலாந்து உடனான போட்டியில் ஈரான் அணி கால்பந்து வீரர்கள், தங்கள் தேசிய கீதத்தைப் பாடாமல் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். ரசிகர் ஒருவர் ஈரான் பெண்களுக்கு ஆதரவாக டி ஷர்ட் அணிந்து மைதானத்தில் ஓடினார். இப்படி பல்வேறு வகையில் ஈரானைச் சேர்ந்தவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இரண்டு மாதங்களுக்கு மேலாக மக்கள் புரட்சி வெடித்து வரும் நிலையில், அந்நாட்டில் அமலில் உள்ள ஆடை கட்டுப்பாட்டு விதிகளைத் தளர்த்துவது அல்லது மாற்றுவது குறித்து ஈரான் அரசும், நீதித்துறையும் ஆலோசித்து வருகிறது. இதனிடையே மதம் சார்ந்த மாநாடு ஒன்றில் பேசிய அந்த நாட்டின் அட்டர்னி ஜெனரல் முஹமது ஜாபர் மண்டேசெரி, ஹிஜாப் சர்ச்சைக்குக் காரணமான சிறப்புக் காவல் படையை நீக்கி விட்டதாகத் தெரிவித்தார். இந்த கண்காணிப்பு படைக்கும், நீதித்துறைக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்றும், இதனை 2006 ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் மொஹமது அஹாமடிநெஜாத் அறிமுகம் செய்தாக தெரிவித்தார்.