இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 07/03/2022 அன்று மீண்டும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையைத் தொடங்கியது. சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அப்பல்லோ மருத்துவர்கள் குறுக்கு விசாரணைக்கு ஆஜராகியிருந்தனர். அப்பல்லோ மருத்துவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார். விசாரணையில் மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்ததாக அப்பல்லோ மருத்துவர் பாபு மனோகர் தெரிவித்திருந்தார். 2016ஆம் ஆண்டு பதவியேற்பதற்கு முன்பே அவருக்கு தலைச்சுற்றல், மயக்கம் இருந்ததாகவும், சில மருந்துகளைப் பரிந்துரைத்ததோடு, உடற்பயிற்சிக்கும் பரிந்துரைத்ததாக மருத்துவர் பாபு மனோகர் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மார்ச் 21ஆம் தேதி ஆணையத்தில் ஆஜராகும்படி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. அதேபோல் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியும் மார்ச் 21ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் இன்று ஆஜராக இருக்கிறார். அதோடு மட்டுமல்லாது சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராக இருக்கிறார்.