இங்கிலாந்து நாட்டின் பிரிஸ்டல் பகுதியில் 104 வயது பாட்டி ஒருவர் வினோத காரணத்தால் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரிஸ்டல் பகுதியில் ஒரு தனியார் காப்பகத்தில் ஏராளமான முதியவர்கள் வசித்து வருகின்றனர். அண்மையில் அங்கு வசிக்கும் முதியவர்களின் ஆசைகளை நிறைவேற்றி வைப்பது என்று அந்த காப்பக நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி ஒவ்வொருவரும் தங்கள் ஆசைகளை ஒரு காகிதத்தில் எழுதி ஒரு பெட்டியில் போட்டுள்ளனர்.
அதில் 104 வயதான அன்னி புரோக்கன் ஒரு முறையாவது கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்ல வேண்டும் என எழுதியிருந்தார். இதனை பார்த்த காப்பக நிர்வாகிகள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். இது தொடர்பாக அங்குள்ள உள்ளூர் காவல் துறையினரிடம் காப்பக நிர்வாகிகள் பேசியுள்ளனர்.
இதற்கு ஒப்புக்கொண்ட அவர்கள் காப்பகத்திற்கு நேரடியாக வந்து அந்த பாட்டியை கைது செய்தனர். கைது செய்து தங்களின் வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அழைத்து சென்றனர். காப்பகத்திற்கு பின்னர் இதுகுறித்து அவர் கூறுகையில், "வாழ்நாள் முழுவதும் சட்டத்தை மதித்துப் நான் நடந்தேன், இதுவரை எதற்கும் காவல்துறையிடம் சிக்கியதில்லை. இதனால் என்னுடைய ஆசை ஒரே ஒரு முறையாவது கைதாக வேண்டும் என்பதுதான். நான் கைது செய்யப்பட்ட இந்த நாள் மிகவும் இனிமையானது. மிகவும் சுவாரஸ்யமாக கழிந்தது. இந்த அனுபவம் இதுவரை எனக்குக் கிடைத்ததே இல்லை. அவர்கள் என் கைகளில் விலங்கு போட்டுக் கைது செய்தனர். அப்போது நான் நிறைவாக உணர்ந்தேன்" என கூறினார். 104 வயதான பாட்டி கைது செய்யப்பட்ட இந்த சுவாரசிய சம்பவம் உலகம் முழுவதும் வித்தியாசமாகவும், உணர்வுபூர்வமாகவும் பார்க்கப்படுகிறது.