இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் மலேசியாவில், நபிகள் நாயகத்தை பற்றி சமூகவலைதளத்தில் தவறான தகவல் பதிவிட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நபிகளை அவமதித்த வழக்கில் 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில், மேலும் இருவர் மீதான விசாரணை வரும் வாரம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஐஜிபி மொகமது ஃபுசி ஹருன் கூறும்போது, "இந்த குற்றத்துக்கு ஓராண்டு சிறை அல்லது 50 ஆயிரம் ரிங்கிட்டுகள் (சுமார் ரூ.8.56 லட்சம்) அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும். முதலாவதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மற்ற இரு நபர்களுக்கு திங்கட்கிழமை அன்று விசாரணை நடத்தப்படும். தகவல் தொடர்பு வட்டங்களைத் தவறாகக் கையாளுதல், இன ரீதியான நல்லிணக்கத்தைக் குலைத்தல், வன்முறையைத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளில் இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது" என கூறியுள்ளார்.
மலேஷியா நாட்டு வரலாற்றில் இப்படிப்பட்ட வழக்கில் ஒரு நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.