
ஆத்தூர் சிறுமி படுகொலை தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிவிப்பு:
‘’சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு அருகில் உள்ள சுந்தரபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி என்ற 13 வயது சிறுமி கழுத்து துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எதிர்வரும் 5.11.2018 அன்று காலை ஆத்தூரில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். எனது தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகளும் சனநாயக சக்திகளும் திரளாகப் பங்கேற்குமாறு வேண்டுகிறோம்.
ஆட்டோ ஓட்டுனராக வேலை செய்து வந்த சாமிவேல் சின்னப்பொண்ணு என்ற தலித் சமூகத்தைச் சேர்ந்த தம்பதியினரின் மகள் ராஜலட்சுமி 8ஆம் வகுப்பு படித்து வந்தார். அவரது வீட்டுக்கு அருகில் குடியிருக்கும் தலித் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் ராஜலட்சுமியிடம் பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். அதை ராஜலட்சுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற தினேஷ் வீட்டில் தனது அம்மாவுடன் பூ கட்டிக்கொண்டிருந்த ராஜலட்சுமியை அவரது வீட்டுக்குள் நுழைந்து கத்தியால் கழுத்தை வெட்டியுள்ளார். வெட்டுப்பட்டு கதறித் துடித்த அந்த சிறுமியை தெருவுக்கு இழுத்து வந்து கழுத்தை அறுத்து தலையை மட்டும் தனியாக எடுத்து தெருவில் வீசி எறிந்துள்ளார். அதன் பின்னர், காவல்நிலையத்துக்குச் சென்று சரணடைந்திருக்கிறார். கொலையாளி தினேஷ் மனநிலை சரியில்லாதவர் எனக் கூறி அவரை காப்பாற்றும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். கொடூரமான இந்த கொலைகாரனை எக்காரணம் கொண்டும் தப்பிக்கவிடக்கூடாது என காவல்துறையினரை வலியுறுத்துகிறோம்.
அண்மைக் காலமாக தமிழ்நாடு முழுவதும் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. தமிழக அரசின் காவல்துறை குற்றவாளிகளை ஒடுக்குவதில் மெத்தனம் காட்டுவதே இதற்குக் காரணம். சாதி வெறியர்களிடம் தமிழக அரசு மென்மையான போக்கைக் கடைபிடித்துவருவது கவலையளிக்கிறது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தவும், அது தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
ராஜலட்சுமி படுகொலையில் நீதிகிடைக்கவும், சேலம் மாவட்டத்தில் வன்கொடுமைகள் தடுத்து நிறுத்தப்படவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி நடைபெறவுள்ள இந்தப் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று வெற்றிபெறச் செய்யுமாறு சனநாயக சக்திகள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.’’