பெங்களூரு நித்தியானந்தா பீடத்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்பாத மனைவியை மீட்டுத் தருமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கணவர் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் முனியப்பன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி, இவரது மனைவி அத்தாய் (40) கடந்த மார்ச் மாதம் பெங்களூருவில் உள்ள நித்யானந்தா பீடத்துக்கு தியான வகுப்புக்கு சென்றுள்ளார். தியான வகுப்புக்கு சென்ற மனைவி 2 மாதங்கள் ஆகியும் தற்போது வரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியைடந்த அவர் கடந்த மார்ச் 26-ம் தேதி போலீசில் புகார் மனு அளித்துள்ளார்.
இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லாததால், நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் இன்று காலை புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கடந்த மார்ச் மாதம் நித்தியானந்தா பீடத்துக்கு தியானம் செய்வதற்காக சென்ற என் மனைவி இதுவரை வீடு திரும்பவில்லை. இதுவரை அவர் குறித்து எந்த தகவலும் இல்லை. அவர் உயிரோடு இருக்கிறாரா என்பதும் தெரியவில்லை. செல்போனில் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. என் மனைவி மீது வங்கி கடனாக ரூ.5 லட்சமும், நிதி நிறுவனத்தில் ரூ.5 லட்சமும், நகை அடமான கடன் ரூ.30 ஆயிரமும் மற்றும் வெளிநபர் கடன் உள்ளது. வங்கி அதிகாரிகள் என்னிடம் நேரில் அழைத்து பணத்தை திருப்பி செலுத்துமாறு தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.
இந்தப் பணம் முழுவதையும் 21 நாள் தியான வகுப்புக்கு எனது மனைவி எடுத்துச் சென்று செலவு செய்துவிட்டார். இதனால் கடந்த 8 மாதங்களாக நான் கடன் தொல்லையாலும், உணவின்றியும் மன உளைச்சலில் உள்ளேன். இனி தற்கொலை செய்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. எனவே மனைவியை கண்டறிந்து மீட்டு வந்து கடனை செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த மனுவில் ராமசாமி கூறியுள்ளார். நித்தியானந்தா குறித்து பல சர்ச்சைகளு நிலவும் நிலையில் அவரது பீடத்துக்கு தியானம் செய்ய சென்றவர் வீடு திரும்பாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.