Skip to main content

நீரில் தத்தளித்த சிறுவர்களைக் காப்பாற்றிய இளைஞர் சேற்றில் சிக்கி உயிரிழப்பு; திருமண நாளில் நிகழ்ந்த சோகம்

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

The youth who saved the children who were drowning in the water got stuck in the mud and Lost their live; Tragedy on the wedding day

 

நீச்சல் தெரியாமல் குளத்தில் தத்தளித்த நான்கு சிறுவர்களைக் காப்பாற்றிய இளைஞர் கடைசியில் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

மதுரை மாவட்டம் ராஜாக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (37). இவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இந்நிலையில் இன்று தனது திருமண நாளைக் கொண்டாடிய முத்துக்குமார் இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்பொழுது கருப்பாயூரணி கண்மாய் பகுதியில் சில சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அதில் சில சிறுவர்கள் நீரில் சிக்கிக் கொண்டு நீச்சல் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

 

இதைக் கண்ட முத்துக்குமார் காப்பாற்றும் நோக்கில் உடனடியாக கண்மாய்க்குள் குதித்து நான்கு சிறுவர்களையும் உயிரை பணயம் வைத்துக் காப்பாற்றினார். நான்கு பேரையும் காப்பாற்றிய பிறகு கரைக்கு திரும்ப முயன்றபோது எதிர்பாராத விதமாக சேற்றில் மாட்டிக் கொண்ட முத்துக்குமார் இறந்து போனார்.

 

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கருப்பாயூரணி போலீசார் மற்றும் மீட்புப் படையினர் முத்துக்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முத்துக்குமார் உயிரிழந்ததை அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. திருமண நாள் அன்றே சிறுவர்களைக் காப்பாற்ற முயன்று இளைஞர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரையில் ‘தமிழ்க் கவிஞர் நாள்’ கொண்டாட்டம் - தமிழக அரசு தகவல்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Tamil Poet's Day' Celebration in Madurai - Tamil Nadu Government Information!

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்ப்பில் பாவேந்தர் பாரதிதாசனின் 133 ஆம் பிறந்தநாள் நிகழ்வு தமிழ்க் கவிஞர் நாளாக நாளை (29.04.2024) காலை 10.30 மணிக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாக அரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம் வழங்கும் கலை நிகழ்ச்சியோடு நிகழ்வு தொடங்குகிறது. தொடக்க விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள் நோக்கவுரை ஆற்றவுள்ளார். இந்நிகழ்விற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தலைமையுரை வழங்கவுள்ளார்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமையில் 'பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தமிழ் உணர்வே! சமுதாய உயர்வே' என்ற தலைப்பில் பட்டிமன்றமும், புலவர் செந்தலை கவுதமன் தலைமையில் 'பாவேந்தர் கண்ட படைப்புக்களங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கமும் முனைவர் சந்திர புஸ்பம் இசையரங்கமும் கவிஞர் நெல்லை ஜெயந்தா  தலைமையில் 'பாவேந்தரின் பார்வைகள்' என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெறவுள்ளது. மதுரை குரு மருத்துவமனையின் மருத்துவர் ச.கு.பாலமுருகன் நிறைவுரை வழங்கவுள்ளார். இந்நிகழ்வில் தமிழறிஞர்களும் பேராசிரியர்களும் அரசுப்பணியாளர்களும் தமிழார்வலர்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் பாரதிதாசன். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் புரட்சிக்கவி என்றும், பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர் ஆவார். தமிழாசிரியர், கவிஞர், திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் ஆவார். 

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.