![youth was arrested for stealing a two-wheeler in Gudiyatham area](http://image.nakkheeran.in/cdn/farfuture/M_cOyV-g_Q3_JBFG_NaLbDH_OncwJf_X1N9YeuFlaMQ/1692347653/sites/default/files/inline-images/994_250.jpg)
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் திருட்டு நடைபெற்று வருகிறது. தங்களது வாகனம் திருட்டுப்போனதாகப் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தந்தாலும் போலீஸ் வழக்கு பதிவு செய்வதில்லை என்றும், அது திருடர்களுக்கு நல்வாய்ப்பாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். சிலர் போலீஸில் புகார் கொடுத்தால் அலைய வேண்டும் என்று நினைத்து புகார் கொடுக்காமல் கூட இருக்கிறார்களாம்.
இந்நிலையில் குடியாத்தம் நகர போலீசார் காந்திநகர் பகுதியில் வாகனத் தணிகையில் ஈடுபட்டனர். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனை அடுத்து அவரை பிடித்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில் அவர் உள்ளி கூட்ரோடு பகுதியை சேர்ந்த அஜித்குமார்(21) என்பதும் அவர் குடியாத்தம் பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
பைக் திருடி சென்னை, பெங்களூரு, சித்தூர் பகுதிக்குச் கொண்டு சென்று விற்பனை செய்து வந்துள்ளார் என்றும், திருட்டு பைக்குகளை விற்பனை செய்த பணத்தில் மது, மாது என மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்ததாகக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் அஜித்குமாரை கைது செய்ததோடு, அவரிடமிருந்து திருடி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.