தேனி மாவட்டம், பங்களாமேடு 32வது வார்டில் வசித்து வருபவர் முத்து. இவரது மனைவி மாரியம்மாள். இத்தம்பதியருக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
தேனியில் உள்ள ராஜவாய்க்கால் பல வருடங்களாக பராமரிப்பின்றியும் தூர்வாராமலும் இருப்பதால் அந்த வாய்க்கால் கழிவுநீர் வாய்க்காலாக மாறியுள்ளது. இந்த வாய்க்காலை தூர்வார கடந்த வருடம் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. அதன் காரணமாக பங்களாமேடு பகுதியில் உள்ள ராஜவாய்க்கால் தடுப்புச்சுவர் இடிக்கப்பட்டது. தூர்வாரும் பணி முழுமையாக முடிவு பெறாமல் பாதியிலேயே நின்றுள்ளது. அதேசமயம், தூர்வாருவதற்காக இடிக்கப்பட்ட வாய்க்காலின் தடுப்புச்சுவரும் மீண்டும் கட்டப்படவில்லை. இதனால், 6 அடி ஆழம் கொண்ட அந்த ராஜவாய்க்கால் திறந்தவெளியாக இருந்து வருகிறது.
இந்நிலையில், முத்து, மாரியம்மாள் தம்பதியின் நான்கு வயது மகள் கடந்த வெள்ளிக்கிழமை காலை ராஜவாய்க்கால் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்தச் சிறுமி அந்த கழிவுநீர் வாய்க்காலில் தவறி விழுந்தார். 6 அடி ஆழம் கொண்ட அந்த வாய்க்காலில் விழுந்து சிறுமி கழிவுநீரில் மூழ்கித் தத்தளித்தார். இதனைக் கண்ட அங்கிருந்த மூதாட்டி இருவர் மற்றும் பெண்கள், சிறுமியைக் காப்பாற்றக் கூச்சலிட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இளைஞர் ஒருவர் சட்டென கழிவுநீர் கால்வாய்க்குள் குதித்து சிறுமியை மீட்டு வெளியே கொண்டு வந்தார். மீட்கப்பட்ட அந்தச் சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.