தஞ்சாவூர் மாவட்டம் அருகே திருமலைசமுத்திரம் தெற்கு வீதி பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன். இவருடைய இளைய மகன் சக்திவேல் (23). இவர் அந்த பகுதியில் தனியார் பால் நிறுவனத்தில் வேன் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இதனிடையே கடந்த 6ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சக்திவேல் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த சக்திவேலின் சகோதரர் சரவணன் வல்லம் காவல்நிலையத்திற்கு புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் வல்லம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 8ஆம் தேதி அம்மாபேட்டை அருகே இராராமுத்திரைக்கோட்டை பகுதியில் உள்ள நெய்வாசல் வாய்காலில் சக்திவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சக்திவேலின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே, கடந்த 13 ஆம் தேதி பாலகுரு என்பவர் சக்திவேலுவை கொலை செய்தது நான் தான் என்று வல்லம்புதூர் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தார். அதன் பின்பு அவர் வல்லம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, பாலகுருவிடம் காவல்துறையினர் விசாரித்த போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. அந்த விசாரணையில், சக்திவேலும் அய்யாசாமிப்பட்டியை சேர்ந்த பாலகுருவின் மகள் திவ்யா (19, பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் அவர்களது காதலுக்கு பாலகுரு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். ஆனாலும், அவர்கள் தொடர்ந்து காதலித்து வந்ததால், சக்திவேலை கொலை செய்ய பாலகுரு திட்டமிட்டார்.
இது குறித்து செங்கிப்பட்டியைச் சேர்ந்த பாஸ்கர் மகன் டீக்கடைக்காரர் சத்யாவை அணுகி உள்ளார். இதனைத் தொடர்ந்து, பாலகுரு மற்றும் சத்யா ஆகிய இருவரும் மதுரையில் இருந்து கூலிப்படையை ஏற்பாடு செய்துள்ளனர். சக்திவேல் பாலகுருவிடம் அடிக்கடி நிலம் விற்பனை சம்மந்தமாக பேசுவது வழக்கம். இதனால், நிலம் விற்பனை குறித்து பேச வேண்டும் எனக் கூறி சக்திவேலுவை திருமலை சமுத்திரம் பகுதியில் உள்ள தனது தென்னந்தோப்புக்கு கடந்த 6ஆம் தேதி பாலகுரு வரவழைத்துள்ளார். அப்போது அந்த இடத்தில் மறைந்து இருந்த மதுரை கூலிப்படையினர் 3 பேர் அங்கு வந்த சக்திவேலுவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
இதற்கு பாலகுருவின் மகன் துரைமுருகன் மற்றும் அவரது வேலையாள் கதிர்வேல் ஆகிய இருவரும் உடந்தையாக இருந்துள்ளனர். பின்னர் சக்திவேலுவின் உடலையும், அவர் வந்த இருசக்கர வாகனத்தையும் வேறொரு வாகனத்தில் ஏற்றிச் சென்று குருவாடிப்பட்டி பகுதியில் உள்ள ஆற்றில் வீசிவிட்டு சென்றுள்ளனர். சக்திவேலுவை கொலை செய்ய பாலகுரு திட்டமிட்டது அவரது மகள் திவ்யாவுக்கு தெரிந்தும், அதை அவர் மறைத்துள்ளார். இதனிடையே, மதுரையைச் சேர்ந்த கூலிப்படையினர் பாலகுருவிடம் பணம் வாங்குவதற்காக அந்தப் பகுதிக்கு நேற்று வந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அங்கு சென்று கூலிப்படையைச் சேர்ந்த கிரிவாசன்( 45), சந்தோஷ்குமார் (44), கார்த்தி (35) ஆகிய மூன்று பேரையும் மடக்கிப் பிடித்தனர். மேலும், பாலகுரு, சத்யா, துரைமுருகன், திவ்யா, கதிர்வேல், மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 3 மூன்று பேர் ஆகிய 8 பேரையும் காவல்துறையினர் கைது செய்து தஞ்சை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். அதன் பின்னர், தேவிகா திருச்சி சிறையிலும் மற்ற 7 பேர் புதுக்கோட்டை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.