![Youth passed away Kulithalai](http://image.nakkheeran.in/cdn/farfuture/4m9JU_tckXQ1CTEn34svz2RbTTT6R4vzKQiO97Klgzc/1689771593/sites/default/files/inline-images/995_294.jpg)
கரூர் மாவட்டம் குளித்தலை ரயில் நிலையம் மணப்பாறை ரயில்வே கேட் அருகில் தண்டவாளம் அருகே ரத்தக் காயத்துடன் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இரவு நேரம் ரயிலில் அடிபட்டு அருகில் பள்ளத்தில் கிடந்ததால் பொதுமக்கள் பார்வைக்குக் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை அவ்வழியே வந்தவர்கள் பார்த்துவிட்டு ரயில்வே அதிகாரிக்குத் தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கரூர் ரயில்வே போலீசார், இறந்து கிடந்தவரின் சட்டைப் பையில் இருந்த செல்போனை எடுத்துப் பதிவு செய்த செல்போன் எண்ணிற்குத் தொடர்பு கொண்டு உறவினர்களிடம் தகவல் அளித்தனர்.
விசாரணையில், திருச்சி மாவட்டம் உறையூர் பணிக்கன் தெருவைச் சேர்ந்த வடிவேல் மகன் யுவராஜ் சங்கர் (34) என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் மீது உறையூர் காவல்நிலையத்தில் நகைப் பறிப்பு வழக்கு உள்ளிட்ட ஐந்து வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து உடலை மீட்ட ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து குளித்தலை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.