
கிருஷ்ணகிரி மாவட்டம் கோணகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(32). இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மணிகண்டன் நேற்று முன்தினம்(4.11.2024) சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிவதாக இருந்துள்ளது. மாலை அணிந்தால், மது அருந்தமுடியாது என்பதற்காக அதற்கு முந்தைய நாள் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார். மேலும், அதிகளவில் அசைவு உணவையும் சாப்பிட்டு உள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம், அதிகாலை 4 மணிக்கு மணிகண்டனுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரை அருகே உள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஊத்தங்கரையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மணிகண்டனின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.