
நாமக்கல் அருகே, உள்ளாட்சித் தேர்தலையொட்டி, திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் போட்டிப்போட்டு பண பட்டுவாடாவில் ஈடுபட்டது, அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்ட மற்றும் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதற்கட்டமாக அக். 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு சனிக்கிழைமை (அக். 9) தேர்தல் நடக்கிறது.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்தில் 6வது வார்டிலிருந்து மாவட்ட கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவின் பி.ஆர். சுந்தரம், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். அதையடுத்து அந்தப் பதவிக்கு நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்த தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணியாகவும், பாமக, தேமுதிக, அமமுக, மநீம, நாதக ஆகிய கட்சிகள் தனித்து களமிறங்கியுள்ளன. என்றாலும், ஆளும் திமுகவுக்கும், அதிமுகவுக்கும்தான் நேரடி போட்டி நிலவுகிறது.
தேர்தல் நடைபெற உள்ள வெண்ணந்தூர் ஒன்றியம் 6வது வார்டில் 54 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் பாதிக்குப் பாதி கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் பெரும்பான்மை சமூகத்தின் வாக்குகளைக் குறிவைத்து அதிமுக தரப்பில், அதே சமூகத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் களம் இறக்கப்பட்டுள்ளார்.
திமுக தரப்பில், இந்த வார்டில் மைனாரிட்டியாக உள்ள நாட்டு கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் ஏஆர்டி என்கிற ஏ.ஆர். துரைசாமி போட்டியிடுகிறார். இவர், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்பியுமான ராஜேஷ்குமாரின் நெருங்கிய உறவுக்காரர்.
நாமக்கல் மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலில் நான்கு தொகுதிகளைப் பறிகொடுத்திருந்த அதிமுகவுக்கு மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டிய நெருக்கடி உள்ளது. அதேபோல், அண்மையில் எம்பியாக புரமோஷன் பெற்ற திமுகவின் ராஜேஷ்குமாருக்கும் மாவட்ட கவுன்சிலர் சீட்டை வென்று காட்டியாக வேண்டிய அழுத்தம் இருக்கிறது.

இதனால், அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் நாள்தோறும் தொண்டர்களைச் சந்தித்து உற்சாகப்படுத்திவந்தனர். பாஜகவினரும் பக்கபலமாக இருந்தனர்.
திமுக தரப்பில் அமைச்சர் மதிவேந்தன், எம்பி ராஜேஷ்குமார், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ கே.எஸ். மூர்த்தி ஆகியோர் நேரடியாக களமிறங்கி தீயாக வேலை செய்துவந்தனர்.
இரண்டு கட்சிகளின் தரப்பிலும் ஏராளமான பிளஸ், மைனஸ் இருந்ததுடன், இரு தரப்புக்குமே இந்த இடைத்தேர்தல் அத்தனை எளிதானது அல்ல என்றே கள நிலவரம் தெரிவிக்கிறது. கடைசி நேரத்தில், பணத்தை எந்தக் கட்சி கொட்டிக் கொடுக்கிறதோ அந்தக் கட்சிதான் வெற்றி பெறும் என்று மக்களும் வெளிப்படையாகவே பேசத் தொடங்கினர்.
அதனால் இரு முக்கிய கட்சிகளுமே வாக்காளர்களுக்குப் பணத்தை வாரி இறைத்துள்ளனர். ஆரம்பத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டுமே வாக்காளர்களுக்குத் தலா 500 ரூபாய் கொடுக்க வியூகம் வகுத்திருந்தன.
அதேநேரம், எப்பாடுபட்டாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முடிவில் களமிறங்கிய திமுக, கடைசி கட்டத்தில் தன் வியூகத்தை மாற்றியது. புதிய வியூகத்தின்படி, அக். 7ஆம் தேதி காலையில் திடீரென்று வாக்காளர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முடிவு செய்தது. ஆளுந்தரப்பின் வியூகத்தை அறிந்த அதிமுக அதிர்ச்சியடைந்தது. காரணம், அவர்கள் ஏற்கனவே போட்டு வைத்திருந்த திட்டத்தையே செயல்படுத்தியிருந்தனர்.
இது தொடர்பாக வெண்ணந்தூர் 6வது வார்டு வாக்காளர்களிடம் கேட்டோம்.
''தேர்தல் பரப்புரையின் கடைசி நாளான அக். 7ஆம் தேதி காலை 7 மணியிலிருந்தே திமுக தரப்பிலிருந்து பணப்பட்டுவாடா தொடங்கிவிட்டது. ஒவ்வொரு வாக்காளருக்கும் 1000 ரூபாயும், 5 கிலோ அரிசியும் கொடுத்துட்டுப் போனாங்க. அது மட்டுமில்லாமல், ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ஒரு வேட்டி, ஒரு சேலையும் கொடுத்தாங்க. சட்டமன்றத் தேர்தலின்போது கூட இந்தளவு எங்களைக் கவனிக்கல.
அதேபோல அதிமுக தரப்பினர் ஒவ்வொரு வாக்காளருக்கும் 500 ரூபாய் ரொக்கமும், பெண் வாக்காளருக்கு சேலையும், ஆண்களுக்கு வேட்டியும் கொடுத்தனர். ஒரு வீட்டில் எத்தனை வாக்காளர்கள் இருந்தாலும் அனைவருக்குமே சேலை, வேட்டி வழங்கினர். அவர்கள் அமாவாசை நாளான அக். 6ஆம் தேதியன்றே கொடுத்துட்டுப் போனாங்க.
தேமுதிக சார்பில் சாந்தி என்பவர் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பிலும் வாக்காளர்களுக்கு 200 ரூபாய் கொடுத்துள்ளனர். ஆனால் ஏனோ எல்லா வாக்காளர்களுக்கும் அவர்கள் பணம் கொடுக்கவில்லை. மற்ற கட்சியினர் எங்களைக் கண்டுகொள்ளவில்லை,'' என்றனர்.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்றில்லாமல், இந்தத் தேர்தல் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கும், ஆளுங்கட்சி எம்.பி. ராஜேஷ்குமாருக்கும் ஏற்பட்டுள்ள நீயா? நானா? போட்டியும் கூட தேர்தல் களத்தைப் பரபரப்பாக்கி உள்ளதாகவும் சொல்கிறார்கள்.
இது தொடர்பாக திமுக தரப்பில் ஒருவரிடம் பேசியபோது, ''நாங்கள் எங்கள் ஆட்சியின் 100 நாள் சாதனைகளைச் சொல்லியும், தளபதியை முன்னிறுத்தியும்தான் வாக்கு சேகரித்தோம். மக்கள் நலனுக்கான அரசு அமைந்திருக்கும்போது நாங்கள் ஏன் வாக்குகளுக்காகப் பணம் கொடுக்க வேண்டும்?,'' என்றார்.
அதிமுக தரப்பிலோ, ''எதுவாக இருந்தாலும் அமைச்சரை (தங்கமணியை இப்போதும் அமைச்சர் என்றே குறிப்பிட்டனர்) கேட்டுக்கொள்ளுங்கள்,'' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டனர்.
இது ஒருபுறம் இருக்க, பாமக, அமமுக கட்சி வேட்பாளர்கள் கமுக்கமாக அதிமுக பக்கம் சாய்ந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள். அதனால்தான் அவர்கள் பெயரளவுக்கு அவரவர் கிராமத்தில் மட்டும் பரப்புரை செய்துவிட்டு ஒதுங்கிக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தலைக் காட்டிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வெண்ணந்தூர் மாவட்ட கவுன்சிலர் தேர்தல் நாளை நடக்கிறது. ஆளுங்கட்சி அதிகாரம், பணப்பட்டுவாடா, சாதிப்பாசம் ஆகியவைதான் இந்தத் தேர்தலின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் என்கிறார்கள்.