இந்திய தொழில் கூட்டமைப்பின், தென் மண்டல பிரிவு சார்பாக சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தக்ஷின் - தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டின் (Dakshin South India Media and Entertainment Summit) இறுதி நாளான நேற்று (10/04/2022) மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தலைவர் நாசர், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், "இந்தியாவில் எங்கிருந்தாலும் இந்தியாதான், இதில் வட இந்தியா, தென்னிந்தியா என்று இல்லை. தமிழ் திரைப்படங்களைப் போலத்தான் மலையாள படமும், மற்ற திரைப்படங்களும். ஏழு ஆண்டுகளுக்கு முன் நான் மலேசியா சென்றிருந்த போது ஒருவர் தனக்கு வட இந்திய திரைப்படங்கள் பிடிக்கும் என்றார். வட இந்திய படங்கள் பிடிக்கும் எனக் கூறியவர், தென்னிந்திய படங்களைப் பார்த்தாரா என்று எண்ணத் தோன்றியது" எனத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு காரில் கிளம்பச் சென்ற நிலையில், செய்தியாளர் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மானிடம், 'மத்திய அமைச்சர் இணைப்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறாரே?' என கேள்வி எழுப்ப, 'தமிழ்தான் இணைப்பு மொழிப்பா' என்று ஷார்ட்டாக பதிலளித்து விட்டு கிளம்பினார்.
இந்தி குறித்து அமித்ஷா பேசியிருந்த அன்றே ஏ.ஆர்.ரஹ்மான் புரட்சிப் பாவலர் பாரதிதாசனின் வரிகளை குறிப்பிட்டு, 'தமிழுக்கும் அமுதென்று பேர்' என்ற கவிதை தொகுப்பில் வரும் 'இன்பத் தமிழ் எங்கள் உரிமைசெம் பயிருக்கு வேர்' என்ற வரியை கொண்ட புகைப்படத்தை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் 'ழ' கரத்தை தங்கிய பெண் தாண்டவமாட, கீழே 'தமிழணங்கு' எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.