வாழப்பாடி அருகே, வாலிபர் மரணத்திற்குக் காரணமான தனியார் பேருந்தை தீ வைத்து எரித்ததாக 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்துள்ள கருமந்துறை கோயில்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டி மகன் இளையராஜா (32). கடந்த 17ம் தேதி மாலை, பகடுபட்டு பிரிவு சாலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சேலத்தில் இருந்து கருமந்துறைக்குச் சென்ற ஒரு தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட இளையராஜா, நிகழ்விடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த இளையராஜாவின் உறவினர்கள், ஆத்திரத்தில் அந்த பேருந்தை அடித்து நொறுக்கினர். சிலர், பேருந்துக்கு தீ வைத்ததில், பேருந்து கொளுந்துவிட்டு எரிந்தது.
விபத்தில் இறந்த இளையராஜாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, அவருடைய இரு குழந்தைகளின் கல்விச்செலவை அரசு ஏற்க வேண்டும், விபத்து நிகழ்ந்த இடத்தில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சடலத்துடன் போராட்டம் நடத்தினர்.
டி.எஸ்.பி.க்கள், வட்டாட்சியர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இதையடுத்தே இளையராஜாவின் சடலம் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, சடலம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து பேருந்தை தீ வைத்து எரித்த நபர்களை கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறையினர் முடுக்கிவிட்டனர். முதல்கட்டமாக நிகழ்விடத்தில் சட்டவிரோதமாக கூடியது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, பேருந்தை தீ வைத்து எரித்தல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது கருமந்துறை காவல் ஆய்வாளர் பாஸ்கர்பாபு வழக்குப்பதிவு செய்தார்.
நிகழ்விடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் சடையன் (47), தமிழ்ச்செல்வன் (28), வெங்கடேசன் (38), கோவிந்தராஜ் (35), தீர்த்தன் (55), கணேசன் (27), ஹரிராம் (32), சந்தோஷ் (24), துரைசாமி (37) ஆகிய 9 பேரை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இந்த நிகழ்வு தொடர்பாக மேலும் சிலரை தேடி வருகின்றனர். காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை கருமந்துறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.