சென்னை ஆவடியில், கொடுத்த 10 ஆயிரம் ரூபாய் கடனை திரும்ப தராத லாரி ஓட்டுநரை இளைஞர் ஒருவர் நண்பர்களுடன் சேர்ந்து அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி கௌரிப்பேட்டையை சேர்ந்த தண்ணீர் லாரி ஓட்டுநர் மோகன் குமார். அதேபோல் ஆவடி புதுநகரை சேர்ந்த பிரபு, இவரும் அதே பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு லாரியில் தண்ணீர் விநியோகிக்கும் பணி செய்து வந்தார். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு மோகன் குமார் பிரபுவிடம் 10 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து பெற்ற பணத்தைத் திரும்ப தராமல் மோகன் குமார் இழுத்தடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவ்வப்போது மோகன் குமாரின் வீட்டிற்கு சென்று பிரபு பணத்தை கேட்டுவந்துள்ளார். இதுதொடர்பாக மோகனுக்கும் பிரபுவுக்கும் போன வாரம் கைகலப்பாகியுள்ளது.
இந்நிலையில் இன்று காலை தண்ணீர் விநியோகிப்பதற்காக மோகன் குமார் வந்த நிலையில் அப்பொழுது அங்கு வந்த பிரபு அவரது நண்பர்களுடன் சேர்ந்து மோகன் குமாரை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் மோகன் குமார் லாரிக்கு பயன்படுத்தும் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி காவல் ஆய்வாளர் முத்துராமலிங்கம் தலைமையிலான போலீசார் மோகன் குமாரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பிரபு மற்றும் அவரது நண்பர்கள் சதீஷ், பிரான்சிஸ் ஆகிய மூன்றுபேரும் தலைமறைவாக உள்ள நிலையில், போலீசார் மூன்றுபேரையும் தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் ஆவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.