தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட சுமார் 56,000 சிம் கார்டுகளை முடக்குவதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட சிம் கார்டுகளை முடக்க தமிழ்நாடு சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். வாடிக்கையாளர்கள் போலி ஆவணங்கள் கொடுத்து சிம் வாங்குவது போலவே, விற்பனையாளர்களும் அனுமதியின்றி மற்றவர்களின் ஆவணங்களை பயன்படுத்தி சிம் கார்டுகளை ஆக்ட்டிவேட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒரே நபரின் பெயரில் 400க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளும், குழந்தையின் புகைப்படத்தை பயன்படுத்தி சிம் வாங்கியதும், இன்னும் பல முறைகேடுகள் சிம் வாங்கியதில் நடந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் 1,102 சிம் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ள போலீஸார், சுமார் 56,000 சிம் கார்டுகளை முடக்க மத்திய தொலைத்தொடர்பு துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.