Skip to main content

காதலியின் திருமணத்தை நிறுத்த போஸ்டர் ஒட்டிய வாலிபர்; அதிர்ச்சியான மணமகள் குடும்பம்

Published on 25/06/2023 | Edited on 25/06/2023

 

youngster puts up poster to stop girlfriend's marriage; bride's family shocked

 

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம்  செம்மண்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் 26 வயதான வடிவரசன். ஜேசிபி டிரைவராக உள்ளார். குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியில் வடிவரசனுக்கு உறவினர்கள் உள்ளனர். அந்த உறவினர் வகையறாவில் 25 வயது இளம்பெண் ஒருவருக்கும் வடிவரசனுக்கும் காதல் ஏற்பட்டு கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் அந்த பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்ததையடுத்து பெற்றோர் கண்டித்தனர்.

 

அந்தப் பெண்ணுக்கும் கே.வி.குப்பம் அடுத்த லத்தேரி கிராமத்தைச் சேர்ந்த ராணுவவீரருக்கும் திருமணம் செய்ய நிச்சயம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காட்பாடி அருகே திருமணம் நடைபெற இருந்தநிலையில், தான் காதலித்த உறவுக்கார பெண்ணை பழிவாங்கும் எண்ணத்தில் வடிவரசன் அந்த இளம் பெண்ணுடன் ஜோடியாக இருப்பதைப் போன்று போஸ்டரை ராணுவ வீரர் உள்ள கிராமப்புற பகுதிகளில் ஒட்டியுள்ளார். இதனைக் கண்ட பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆங்காங்கே ஒட்டப்பட்டு இருந்த வாழ்த்து போஸ்டர்களையும் கிழித்தனர். இந்த போஸ்டர் ஒட்டிய விவகாரம் குறித்து அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் பரதராமி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

 

bb

 

புகாரைத் தொடர்ந்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின் பேரில் பரதராமி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாழ்த்து போஸ்டர்களை ஒட்டியது வடிவரசன் என தெரியவந்தது இதையடுத்து போலீசார் வடிவரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடப்பதால் வேதனை அடைந்த வடிவரசன் தனக்குத்தானே வாழ்த்து போஸ்டர் அடித்த சம்பவம் குடியாத்தம் மற்றும் கே.வி.குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்