குமரி மாவட்டம், திருவட்டார் மூவாற்று முகத்தைச் சேர்ந்த எட்வின் (28) என்பவர் டிப்ளமோ படித்துவிட்டு 2 ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு தற்போது ஊரில் தனியார் பால் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். தந்தை இறந்துவிட்ட நிலையில், எட்வினின் தாய் மகனுக்கு திருமணம் செய்ய பெண் பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில், அவரின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 45 வயதுள்ள தன் உறவுக்காரப் பெண்ணை எட்வின் நோட்டமிட்டு வந்துள்ளார். சில தினங்களுக்கு முன் அந்தப் பெண்ணின் கணவர் அதிகாலையில் வேலைக்குச் சென்ற பிறகு வீட்டின் பின்பக்கம் சென்ற எட்வின் ஜன்னல் வழியாக அந்தப் பெண் படுத்திருந்ததைப் பார்த்துள்ளார். திடீரென்று அந்த பெண், எட்வினைப் பார்த்து சத்தம் போட்டதால் எட்வின் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து மறுநாள் காலையில் அந்தப் பெண் எட்வினின் தாயாரைப் பார்த்து நடந்த விசயங்களை சொல்லி மகனை கண்டித்து வைக்க எச்சரித்துள்ளார்.
இந்த விசயம் அந்த ஊர் முழுவதும் காட்டுத்தீ போல் பரவியுள்ளது. இது எட்வினுக்கு அவமானத்தை ஏற்படுத்தவே, எப்படியாவது அந்தப் பெண்ணை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்துள்ளார். இந்த நிலையில், 14ம் தேதி அந்தப் பெண் ஒரு புதுமனை புகு விழாவிற்குச் சென்றுவிட்டு மதியம் தனியாக வீடு திரும்பியுள்ளார். இதனைப் பார்த்த எட்வின் எப்படியாவது பழிவாங்க வேண்டுமென முடிவு செய்து தன்னுடைய வீட்டிற்கு வந்து ஒரு இரும்பு கம்பியை எடுத்துக்கொண்டு அந்தப் பெண் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அந்தப் பெண், வீட்டில் படுத்திருந்தார். அப்போது எட்வினை பார்த்ததும் அவர் சத்தம் போட்டுள்ளார். உடனே எட்வின் தான் மறைத்து வைத்திருந்த கம்பியால் அப்பெண்ணின் தலையில் அடிக்கவே, அவர் ரத்தம் சொட்ட மயக்கமானார். அதன் பிறகு ஆத்திரம் தீராத எட்வின், அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு தன்னுடைய வீட்டிற்கு வந்து எதுவும் தெரியாதது போல் இருந்துள்ளார்.
பின்னர் ஒரு மணி நேரத்தில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த அப்பெண்ணின் கணவர், மனைவி கிடந்த அலங்கோலத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்து உடனே திருவட்டார் போலீசில் புகாா் செய்திருக்கிறார். அந்தப் புகாரைத் தொடர்ந்து அங்கு வந்த போலீஸ், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது போலீசாருக்கு உதவியாக எட்வினும் இருந்துள்ளார். இதில் எட்வினின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட போலீசார், அவரைப் பிடித்து விசாரித்ததில் நடந்த உண்மை சம்பவத்தை அப்படியே போலீசில் கூறினார். இதையடுத்து எட்வினை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.