Skip to main content

தாலி கட்டும் நேரத்தில் திடீர் 'டிவிஸ்ட்' - காதலனை கரம் பிடித்த இளம்பெண்!

Published on 24/05/2023 | Edited on 24/05/2023

 

young woman who stop her wedding and married her boy friend

 

வாழப்பாடி அருகே திருமண மேடையில் தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை தடுத்து நிறுத்திய மணப்பெண், காதலனை கரம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள சோமம்பட்டியைச் சேர்ந்தவர் மல்லிகா. இவருடைய மகன் லோகநாதன் (27) எம்பிஏ பட்டதாரி. இவருக்கும், மின்னாம்பள்ளியைச் சேர்ந்த சுவேதா (21) என்பவருக்கும் இருவீட்டு பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மே 22 ஆம் தேதி திருமணம் நடக்க இருந்தது. இந்த திருமணத்தில் சுவேதாவுக்கு துளியும் விருப்பம் இல்லை எனச் சொல்லப்படுகிறது. பெற்றோர்கள், சுவேதாவை கட்டாயப்படுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துள்ளதாக அவருடைய காதலன் கவியரசன், வாழப்பாடி - காரிப்பட்டி ஆகிய இரு காவல்நிலையங்களிலும் புகார் அளித்து இருந்தார். 

 

இதையடுத்து சேஷன்சாவடியில் திருமணம் நடக்க இருந்த மண்டபத்திற்கு கவியரசன், காவல்துறையினரை அழைத்துச் சென்றார். அங்கு மணக்கோலத்தில் இருந்த சுவேதாவிடம் காவல்துறையினர் விசாரித்தபோது, அவருக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாததும், பெற்றோரின் கட்டாயத்தால் மணமேடைக்கு வந்ததாகவும் கூறினார். அதே நேரம், தான் கவியரசனையே மணக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதைக் கேட்டு இருதரப்பு பெற்றோர்களும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மணமகளின் அதிரடி வாக்குமூலத்தால், கடைசி நிமிடத்தில் திருமணம் நடைபெறுவது நின்று போனது. அதன்பிறகு சுவேதா, கவியரசன் ஆகிய இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். 

 

சுவேதாவும், கவியரசனும் ஒரே பகுதியில் அருகருகே வசித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு, காதல் மலர்ந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டாக காதலிந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் தெரிய வந்ததை அடுத்தே, சுவேதாவுக்கு அவருடைய பெற்றோர், லோகநாதனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். சுவேதா, இதுகுறித்து தனது காதலன் கவியரசனுக்கு அலைப்பேசி மூலம் தகவல் அளித்து, எப்படியாவது தன்னை மீட்டுச் செல்லுமாறு அழுது புலம்பியுள்ளார். ஒருவேளை, தன் விருப்பத்திற்கு மாறாக திருமணம் நடந்தால், தான் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார். 

 

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட கவியரசன், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கும், பின்னர் வாழப்பாடி, காரிப்பட்டி காவல்நிலையங்களுக்கும் தகவல் அளித்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சுவேதா, கவியரசனை காவல்துறையினர் சேர்த்து வைத்தனர். அவர்களுக்கு இரு தரப்பு பெற்றோரும் எந்த இடையூறும் செய்யக்கூடாது என பெற்றோர்களுக்கு எச்சரிக்கை செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, சுவேதாவால் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், திருமணத்திற்காக நிறைய செலவு செய்துள்ளதாகவும் லோகநாதனின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்