மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷாலினி(23). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மணப்பாறைப்பட்டியில் உள்ள திரையரங்கில் வேலை செய்தபோது, உடன் பணியாற்றிய ஜெபஸ்தியார்பட்டி நவீன்குமார்(22) என்பவரைக் காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. நவீன்குமாருக்கு மதுப்பழக்கம் இருப்பதால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் ஹரிஷாலினி நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஹரிஷாலினியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் நடந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மாலை நேரம் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள், விசிக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் ஆற்றலரசு, நகர செயலாளர் வடிவேல் ஆகியோர் தலைமையில் மணப்பாறை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து முடங்கியது.
பின்னர் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர்கள் ஜெ.கே.கோபி, பிரபு ஆகியோர் உறவினர்களிடம் சமரசம் பேசி, கணவர் வீட்டினரிடமிருந்து குழந்தையைப் பெற்று பெண் வீட்டாரிடம் ஒப்படைத்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. ஹரிஷாலினி உயிரிழப்பு குறித்து வையம்பட்டி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.