கஜா புயல் நவம்பர் 16 ந் தேதி அதிகாலை தாக்கிய போது விவசாயிகள் இந்த அளவு சேதம் ஏற்பட்டிருக்கும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. புயலும், மழையும் முடிந்து வீட்டைவிட்டு வெளியே வந்தவர்கள் தோட்டங்களை பார்த்து உறைந்து பொய் நின்றார்கள். காரணம் அவர்கள் வருமானத்திற்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் செல்லமாகவும் வளர்த்த அத்தனை மரங்களும் தரையோடு சாய்ந்து கிடந்தது.
இந்த மரங்களை எப்படி அகற்றுவது.. இந்த துயரத்தில் இருந்து மீள்வது எப்படி என்பது அறியாமல் தவித்தனர். தோட்டங்களில் விழுந்த அத்தனை மரங்களும் இன்றும் அகற்ற முடியாமல் அப்படியே கிடக்கிறது. இந்த தென்னை மற்றும் பலா மரங்களை நம்பி வாங்கிய கடன்களை எப்படி திருப்பி செலுத்துவது.. மகனை, மகளை படிக்க வைக்க திருமணம் செய்ய வளர்த்த தேக்கு மரங்கள் இல்லையே எப்படி படிக்க வைப்பது என்ற அந்த சிந்தனைகளே விவசாயிகளை இன்னும் சோகத்தில் இருந்து மீளமுடியாமல் செய்துள்ளது.
பிரதான சாலை ஓரங்களில் பெரிய லாரிகள் எளிதாக சென்றுவரக் கூடிய பகுதிகளில் உள்ள தென்னை மரங்களை மட்டும் ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் செங்கல் சூளைக்கும், கட்டுமானப் பணிக்கும் என்று மரங்களை வெட்டி எடுத்துச் செல்கின்றனர். இதில் தென்னை மரத்தின் அடிப்பகுதியும், நுனிப் பகுதியும் அந்தந்த தோட்டங்களிலேயே பரவிக் கிடக்கிறது. அவற்றை அகற்ற இயந்திரம் இல்லை.. தீ வைத்து எரித்தாலும் எளிதில் எரியாது என்ற நிலையில் தோட்டங்கள் நிறைய கிடக்கிறது.
இந்த நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெய்வத்தளி கிராமத்தில் தன்னார்வ இளைஞர்களை கொண்டு நமது நண்பர்கள் விவசாய மீட்புக்குழு உருவாக்கப்பட்டது. தென்னை மரங்கள் சாய்ந்து கிடக்கும் தோட்டங்களுக்கு சென்று சொந்த செலவில் இயந்திரங்களைக் கொண்டு மரங்களை அறுத்து அகற்றி தோட்டங்களின் ஓரங்களில் அடுக்கி வைப்பதுடன் தோட்டம் முழுவதும் சிதறிக் கிடக்கும் தென்னை மட்டைகளையும் தோட்டங்களில் கிடக்கும் கழிவுகளையும் தீ வைத்து எரித்து தோட்டங்களை சுத்தம் செய்து கொடுக்கிறார்கள். இவர்களுக்கான செலவுகளை சில தன்னார்வ நண்பர்கள் வழங்கினாலும், தோட்டக்காரர்கள் மதிய உணவு கொடுக்கிறார்கள். இல்லை என்றாலும் சொந்த செலவிலேயே பணி செய்கிறார்கள். கூடுதலாக தென்னை மரங்களை தூக்கி அகற்றும் இயந்திரம் கிடைத்தால் விரைவில் பல கிராமங்களின் தோட்டங்களை சுத்தம் செய்ய முடியும் என்கிறார்கள்.
இந்த நிலையில் தான் தாங்கள் இயந்திரம் மூலம் அறுத்து அகற்றும் தென்னை மரங்களின் அடிப் பகுதியை டிராக்டர் போன்ற வாகனங்களில் ஏற்ற முடியாமல் சிரமப்பட்டனர். அப்போது உதித்தது தான் இருக்கை தயாரிக்கும் யோசனை..
அதாவது சாலை ஓர தேநீர் மற்றும் சிற்றுண்டி விடுதிகள், கேளிக்கை விடுதிகள், கடற்கரை விடுதிகள், பூங்காக்களில் அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் மற்றும் கல் இருக்கைகளை போல அடிப் பகுதியை மேஜையாகவும் நுனிப் பகுதியை இருக்கையாகவும் வடிவமைத்தனர். ஒருவர் தென்னை மர இருக்கையில் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டு தேனீர் குடிக்க வசதியாக அந்த இருக்கை அமைந்தது. அதன் பிறகு அவர்கள் அகற்றிய அத்தனை தென்னை மரங்களின் அடி, நுனி பகுதிகளை மேஜை, இருக்கைகளாக அமைத்து வைத்துள்ளனர்.
இது குறித்து நமது நண்பர்கள் விவசாய மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் நெவளிநாதன் கூறும் போது.. இன்னும் கஜா புயலின் தாக்கத்தில் இருந்தும் அதிர்ச்சியில் இருந்தும் மீளமுடியாத விவசாயிகளுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த குழு பல தோட்டங்களில் மரங்களை அகற்றி மறு நடவு செய்ய நிலத்தை கொடுத்திருக்கிறது.
அப்படி மரங்களை வெட்டி அகற்றும் போது மரத்தின் நடுப்பகுதிகளை சுமார் 8 அடி முதல் 10 அடி துண்டுகுளாக வெட்டி தோட்டங்களின் ஓரங்களில் அடுக்கிவிட்டோம். ஆனால் அடிப்பகுதியும் நுனிப் பகுதியும் தேவையில்லாம் கிடந்தது. அதை என்ன செய்யலாம் என்ற போது தான் கேளிக்கை விடுதிகள், சொகுசு விடுதிகளில் இதுபோல ஒருவர் அல்லது இருவர் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டு தேனீர் குடிப்பது போல இருக்கை தயாரிக்கலாம் என்ற எண்ணம் வந்தது. சில அடிப்பகுதிகளையும் நுனிப் பகுதிகளையும் அறுத்து வைத்து பார்த்தோம் அழகாக இருந்தது. அதன் பிறகு அவற்றை அப்படியே செய்து வைத்துள்ளோம்.
செங்கல் சூலை மற்றும் கட்டுமாணப் பணிகளுக்கு நல்ல மரங்களை அறுத்துக் கொண்டு அடியும் நுனியும் போட்டுவிட்டு செல்கிறார்கள். அவற்றை அகற்ற முடியாமல் விவசாயிகள் தவிக்கிறார்கள். அதனால் விடுதிகள் நடத்துபவர்கள், விடுதி தொடங்க நினைப்பவர்கள் விவசாயிகளுக்கு கைகொடுக்கும் விதமாக தென்னை மரங்களில் இருந்து அறுக்கப்படும் அடி, நுனி பகுதிகளை வாங்கிச் சென்று அழகாக இருக்கைகளாக அமைத்துக் கொள்ளலாம். பல ஆயிரங்களை செலவு செய்து கல், இருக்கைகள் செய்வதை விட குறைந்த விலையில் விவசாயிகளுக்கு கை கொடுக்க இயற்கையோடு இந்த இருக்கைகளை அமைக்கலாம் என்றவர் நமது நண்பர்கள் விவசாய மீட்புக்குழு சார்பில் விரையில் சாலை ஓர விடுதி தொடங்கி இந்த இருக்கைகளை பயன்படுத்த உள்ளோம் என்றார்.
கார்டனுடன் இணைந்து இயற்கையான விடுதிகள் நடத்தும் தொழில் அதிபர்கள் விவசாயிகளுக்கு கை கொடுக்க இந்த இருக்கைகளை பயன்படுத்தலாம்.