கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த நல்லூர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பர்கத் அலி. கோமுகி அணையில் இருந்து, மணிமுக்தா ஆற்றில், தண்ணீர் திறந்து விடப்பட்டதால், தண்ணீர் வருவதைப் பார்ப்பதற்காக பர்கத் அலி நண்பர்களுடன் ஆற்றிற்குச் சென்றுள்ளார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக பர்கத் அலி, தவறி ஆற்றுக்குள் விழுந்த நிலையில் இதைப் பார்த்த அவரது சக நண்பர்கள், மூங்கில் கழி கொண்டும், கயிறு மூலமாகவும் அவரைக் காப்பாற்றியுள்ளனர்.
சுமார் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு, ஆற்றில் விழுந்த இளைஞரை அவரது நண்பர்கள் உயிருடன் மீட்டனர்.
நண்பர்கள் காப்பாற்றும் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவி வருகிறது. அதேசமயம் மணிமுக்தா ஆற்றின் இருகரையிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், செல்ஃபி எடுப்பதற்காகவும், குளிப்பதற்காகவும் யாரும் செல்ல வேண்டாம் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.