சென்னையில் ஆழ்வார்பேட்டையிலுள்ள நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவருமான கமல்ஹாசனது இல்லத்தில் அத்துமீறி நுழைந்ததால் போலீசாரால் எச்சரிக்கப்பட்டிருந்தவர் உயர் அதிகாரிகளின் ஆணைக்கு இணங்க இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று காலை ஆழ்வார்பேட்டையிலுள்ள கமலஹாசன் இல்லத்திற்கு திருவல்லிக்கேணியில் ஜூஸ் கடையில் வேலை செய்துவரும் கடலூர் திட்டக்குடியை சேர்ந்த சபரிநாதன் என்ற இளைஞர் ரசிகர் எனக்கூறி உள்ளே செல்ல முயன்றுள்ளார்.
அதனை கண்ட வீட்டின் காவவலாளி அவர் வீட்டில் இல்லை என அனுமதிக்க மறுத்துவிட்டார். சிறிதுநேரம் அங்கேயே காத்திருந்த அந்த நபர் காவலாளி இல்லாத பொழுது சாதுர்யமாக எகிறி குதித்து அத்துமீறி வீட்டில் நுழைந்துள்ளார். ஆனால் அங்கே கதவுகள் அடைக்கப்பட்டிருந்ததை பார்த்து செய்வதறியாமல் திகைத்துள்ளார்.
உடனே அங்கு வந்த காவலாளி இதை கண்டு பதறிப்போய் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர் அந்த நபரை எச்சரித்து அனுப்பினர்.
ஆனால் உயரதிகாரிகளின் கட்டளையின் பேரில் அந்த நபரை இன்று காலை போலீசார் கைது செய்தனர்.