புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. மாநில திட்ட குழு கூட்டம் கடந்த 13-ஆம் தேதி கூட்டப்பட்டு பட்ஜெட் தொகை ரூ.8425 கோடி என இறுதி செய்யப்பட்டது. இச்சூழலில் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் கூடியது. முதலாவதாக முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன் மற்றும் டில்லி முன்னாள் முதல்வர் ஷீலாதீட்சித் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதில் அனைத்துக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் நினைவேந்தல் உரை நிகழ்த்தினர்.
ஆனால் கூட்டம் தொடங்கியவுடன் சிறப்பு பேரவை கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்து பேரவை உறுப்பினர்களுக்கு முன் கூட்டியே ஏன் தெரிவிக்கவில்லை? எனக்கூறி அ.தி.மு.க, என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆகிய எதிர்கட்சி உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து புதுச்சேரியின் நீர்வளம் பாதுகாப்பதற்கான தீர்மானம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது மற்றும் தமிழ்மொழி உட்பட மும்மொழி கொள்கையை கடைபிடித்தல், நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை ரத்து செய்தல் ஆகிய நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் முதல் தீர்மானமான புதுச்சேரி மாநிலத்தில் நீர் மேலாண்மையை செயல்படுத்த ஏற்கனவே ரூ.2,600 கோடிக்கு திட்டம் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. ஆகவே மத்திய ஜலசக்தி துறையின் மூலம் நீர் மேலாண்மை திட்டத்திற்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அதன் பின்னர் புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணையரை நியமனம் செய்வது தொடர்பாக துணை நிலை ஆளுநர் எடுத்த நடவடிக்கை தொடர்பான பிரச்சினை பேரவையில் எழுந்தது. அப்போது பேசிய நாராயணசாமி, “துணை நிலை ஆளுநர் தன்னிச்சையாக எடுத்த முடிவு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் உரிமையை பறிக்கும் செயல். இவ்விஷயத்தில் சட்டப்பேரவை தலைவர் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். அதனை தொடர்ந்து பேசிய சட்டப்பேரவை தலைவர் சிவக்கொழுந்து, “மாநில தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிக்கையை ரத்து செய்யவும், அது சம்பந்தப்பட்ட கோப்புகள் அனைத்தையும் தலைமை செயலாளர் இரு தினங்களுக்குள் தன்னிடம் ஓப்படைக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக உறுப்பினர்களின் விவாதத்தின் போது ஆளுநர் கிரண்பேடியை மனநோயாளி என காங்கிரஸ் உறுப்பினர் ஜெயமூர்த்தி பேரவையில் பேசினார். இதை உடனடியாக அவை குறிப்பில் இருந்து எடுக்க வேண்டும் என முதலவர் நாராயணசாமி சபநாயகரிடம் கோரிக்கை வைத்தார்.