வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம், இராணிப்பேட்டை மாவட்டம் என இரண்டு மாவட்டங்கள் புதியதாக பிரிக்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 15-ந்தேதி தமிழகரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த நவம்பர் 13-ந்தேதி திருப்பத்தூர் மாவட்டம், இராணிப்பேட்டை மாவட்டத்துக்கான முறையான அரசாணை வெளியிடப்பட்டு, அதில் உள்ள தாலுக்காக்கள் குறித்து விபரமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நவம்பர் 15-ந்தேதி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக சிவனருள் ஐ.ஏ.எஸ், இராணிப்பேட்டை ஆட்சியராக திவ்யதர்ஷினி ஐ.ஏ.எஸ் ஆகியோரை நியமித்து தலைமை செயலாளர் அறிவித்துள்ளார்.
அதேபோல் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக விஜயகுமார் ஐ.பி.எஸ்ஸும், இராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளராக மயில்வாகனம் ஐ.பி.எஸ்ஸையும் நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார் உள்துறை செயலாளர்.
மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் ஏற்கனவே சிறப்பு அதிகாரியாக இந்த மாவட்டத்தில் நிர்வாகம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மட்டும் விரைவில் பொறுப்பேற்கவுள்ளனர். அரசின் சார்பில் திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டம் முறையான தொடக்க நிகழ்வு நவம்பர் இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.