
திருச்சி மாவட்டம் துறையூர் பச்சமலை பகுதியில் உள்ள கோரையாற்றில் நேற்று(26.5.2022) குளிக்க சென்றவர்களில் ஒருவா் பாறையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சோ்ந்த முகுந்தன்(35) கப்பலில் மரைன் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இன்னும் 6 மாதத்தில் பணி உயர்வு வழங்கப்பட உள்ள நிலையில், விடுமுறைக்காக வீட்டிற்கு வந்துள்ளார்.
இதையடுத்து பெரம்பலூரை சேர்ந்த தன்னுடைய நண்பர்கள் சாஜித்கான்(20), ஷாஜகான்(21) ஆகிய இருவரோடும் சோ்ந்து கோரையாற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்பகுதியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற பதாகைகள் வைக்கப்பட்டிருந்ததையும் மீறி அப்பகுதியில் குளிக்க சென்றுள்ளனா். நேற்று(26.5.2022) மதியம் குளிக்க சென்ற நிலையில் எதிர்பாராதவிதமாக கோரையாற்றில் திடீர் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் இருவா் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு, பின்பு செடி கொடிகளை பிடித்து கரையேறி உள்ளனர். ஆனால் முகுந்தன் வெள்ளத்தில் சிக்கி பாறை இடுக்கில் மாட்டியதால் தண்ணீரில் இருந்து வெளியே வர முடியாமல் மூச்சு திணறி இறந்துள்ளார்.
இந்நிலையில் தண்ணீர் வடிந்த பிறகே அவா் ஆற்றில் சிக்கியது தெரியவந்துள்ளது. இதையடுத்து துறையூர் வனத்துறையினா் ரஞ்சித் தலைமையிலான 7 போ் கொண்ட குழு முகுந்தனை போராடி மீட்டனா். அதன் பிறகு உடலை வனத்துறையினரிடம் இருந்து பெற்று துறையூர் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனா். வனத்துறை சார்பில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டும் அதையும் மீறி குளிக்க செல்வதால் தொடா்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. கடந்த மாதமும் இதேபோல் காட்டாற்று வெள்ளத்தில் ஒரு இளைஞா் சிக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.