மண்ணோடு மண்ணாக மாறிக்கொண்டிக்கும் வாகனத்திலும், குட்டைச்சுவற்றிலும், காவல்நிலைய காம்பவுண்ட் சுவற்றிலும் இன்றைய பொழுதை கழித்ததை அவ்வளவு எளிதில் மறக்கமாட்டார்கள் பாளையங்கோட்டையை சேர்ந்த அந்த அரசு உதவி பெறும் இரு பள்ளி மாணக்கர்களும்.
விஷயம் இதுதான்... நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையிலுள்ளது அரசு உதவி பெறும் பள்ளிகளான கதீட்ரல் பள்ளியும், தூய ஜான்ஸ் பள்ளியும். பன்னிரெண்டாம் வகுப்பு வரை மாணாக்கர்கள் பயிலும் இப்பள்ளிகளில் இரண்டு பள்ளி மாணாக்கர்களுக்கிடையே அடிக்கடி மோதல் நடைப்பெற்று வந்திருக்கின்றன. அவ்வப்போது பள்ளி சார்பாகவும், பெற்றோர் சார்பாகவும் நடவடிக்கை எடுக்க கண்டிப்போடு அடங்கிவிடும் இத்தகைய சிறு சிறு மோதல்கள்.
இவ்வேளையில், நேற்று முன்தினம் ஒரு பள்ளியை சேர்ந்த மாணவனுக்கு பிறந்தநாள் என்பதால் பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது அங்கு வந்த மற்றொரு பள்ளி மாணவர்களுக்கும், இவர்களுக்கும் கேலி செய்வதாக மோதல் எழுந்தது. வாக்குவாதத்தில் ஆரம்பித்த இம்மோதல் கைக்கலப்பில் முடிந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒரு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கையில் பயங்கர ஆயுதங்களுடன் மற்றொரு பள்ளி மாணவர்களை அதே மைதானத்தில் தாக்க வந்துள்ளனர், இதுகுறித்து தகவலறிந்தத பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில் இதற்கு முன்பு நடந்த சம்பவங்களை இருதரப்பும் கூற, இனிமேல் இப்பிரச்சனை தொடராத வண்ணம் இரண்டு தரப்பு மாணக்கர்கள் 49 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து சமாதானப்படுத்தி, மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதற்காக அந்த நூதன தண்டனையை வழங்கினார் பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன்.
"அவர்கள் செய்தது சிறுபிள்ளைத்தனமானது என்பதால் முதலில் சமாதானப்படுத்தினேன் என்றாலும், அவர்கள் செய்த தவறு அவர்களுக்குத் தெரியவேண்டுமே அதனால்தான் 1330 திருக்குறளையும் எழுதி வந்து காண்பிக்க வேண்டுமென கூறினேன். அதிலும் ஒரு சில மாணாக்கர்கள் மட்டும்தான் எழுதி வந்து காண்பிச்சாங்க.. மத்தவங்க எழுதவில்லை. உடனடியாக வேண்டுமென்றேன். அதனால்தான் இப்படி உட்கார்ந்து எழுதிக்கொடுத்துவிட்டு சென்றார்கள். இனிமேல் பிரச்சனை செய்யமாட்டார்கள் பாருங்களேன்" என நம்பிக்கையுடன் பேசுகிறார் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன். அவருடைய நம்பிக்கையை காப்பாற்றுவார்களா மாணக்கர்கள்?