தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாகத் திகழும் விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் 9 வருடங்கள் கழித்து ஒரே தேதியில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இதனால் அவர்களது ரசிகர்களைத் தாண்டி ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகின் பார்வையும் தற்போது 'வாரிசு' மற்றும் 'துணிவு' படங்களை நோக்கி உள்ளது.
இருவரின் ரசிகர்களும் அவர்களது விருப்ப நடிகர்களின் படங்கள் தனித்தனியே வெளியானாலே பேனர், பட்டாசு என்று திருவிழாவாகவே மாற்றிவிடுவார்கள். இப்போது இருவரின் படங்களும் பொங்கலை முன்னிட்டு ஒன்றாக வெளியாகியுள்ளதால், திரையரங்கம் மற்றும் முக்கியமான பகுதிகளில் பார்க்கும் இடமெல்லாம் பேனர், போஸ்டர், பட்டாசு என்று போட்டிப் போட்டு பட்டையைக் கிளப்பி வருகின்றனர். இரு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனிடையே ரசிகர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் விஜய் மற்றும் அஜித் பேனர்கள் கிழிக்கப்பட்டும், திரையரங்கு கண்ணாடிகள் உடைக்கப்பட்டதுமான சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் துணிவு படம் பார்க்க வந்த பிரதீப் என்ற இளைஞர் திரையரங்கு கதவின் மீது ஏறி நின்று கொண்டாடிய போது தவறி விழுந்துள்ளார். இதனால் அவருக்கு கால் முறிந்தது. இதனைத் தொடர்ந்து பிரதீப்பினை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் துணிவு படம் பார்க்கப்போவதாக ஒற்றைக்காலில் நின்றுள்ளார். அவரை வற்புறுத்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். அப்போதும் பிரதீப் அல்டிமேட் ஸ்டார் அஜித் வாழ்க என்றும் துணிவு வாழ்க என்றும் கத்திக்கொண்டே இருந்துள்ளார்.
உனக்கு அம்மா முக்கியமா அப்பா முக்கியமா எனக் கேட்ட பொழுது, எனக்கு யாரும் வேண்டாம், அஜித் போதும். அவர் தான் முக்கியம் எனவும் கூறியுள்ளார். தொடர்ந்து கத்தியபடியே இருந்த பிரதீப் திடீரென மருத்துவமனையில் இருந்து ஓடியுள்ளார். 2 வருடங்களுக்கு முன் தனக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அதனால் தன்னுடைய கால் வளைந்து இருக்கிறது என்றும், இது தெரியாமல் தன்னை தூக்கி வந்துவிட்டதாகவும் மருத்துவரிடம் கூறியுள்ளார். இதன் பின் தன்னை துணிவு படத்தின் முதல் காட்சியை பார்க்கவிடாமல் செய்துவிட்டதாகவும் இரண்டாவது காட்சியை பார்க்கப்போகிறேன் என்றும் திரையரங்கிற்கு ஓடிச் சென்றது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.