Skip to main content

துபாய் பழக்கம் தமிழ்நாட்டில் உதவி; போலீசிடம்  சிக்கிய கும்பல்

Published on 06/01/2023 | Edited on 06/01/2023

 

yougesters helped to police for cuddalore district incident

 

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள வடகரை கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் பாலுவுக்குச் சொந்தமான மாட்டுக் கொட்டகை ஒன்று உள்ளது. இந்த கொட்டகையில் நேற்று முன் தினம் இரவு எட்டு மணியளவில் மர்ம நபர்கள் சிலர் மது விருந்து நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அருகிலிருந்த அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அவர்கள் மீது சந்தேகம் அடைந்து, அவர்களுக்குத் தெரியாமல் அருகில் மறைந்திருந்து அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை ரகசியமான முறையில் கண்காணித்தனர். அங்கிருந்த இளைஞர்கள் இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து கொள்ளை அடிப்பது குறித்து திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி இளைஞர்கள் உடனடியாக அவசர போலீஸ் 100 என்ற எண்ணை தொடர்பு கொண்டனர்.

 

இதையடுத்து பெண்ணாடம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சின்னதுரை தலைமையில் போலீஸ் டீம் குழுவாகச் சென்று கொட்டகையில் தங்கியிருந்த அனைவரையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவர்களிடமிருந்து கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர் பிடிபட்டவர்களைப் பெண்ணாடம் காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தைச் சேர்ந்த  ராஜசேகர், வடிவேலு, கவுதம் வினித், முசிறியைச் சேர்ந்த தனபால், திருநெல்வேலி மாவட்டம் தேவிபட்டினம் கார்த்தி குமார், தஞ்சாவூர் ரவி, பட்டுக்கோட்டை செந்தில் குமார், இராமனூர் கார்த்தி என்பது தெரிய வந்தது.

 

இவர்கள் அனைவரும் பெண்ணாடம் வடக்கு வெள்ளாளர் தெருவில் உள்ள ஒருவர் வீட்டில் நள்ளிரவில் புகுந்து நகை, பணம் ஆகியவற்றைக் கொள்ளையடிப்பது குறித்து திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர். கொள்ளையடிப்பதற்காக இங்கு வந்து முகாமிட்டுள்ளது தெரிய வந்தது. எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த அரிவாள், உருட்டுக்கட்டை, முகமூடி, கையுறை மற்றும்  இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட  இவர்கள் அனைவர் மீதும் கரூர், திருப்பூர், பல்லடம் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. 

 

இந்த கும்பல் தங்குவதற்கு தனது கொட்டகையில் இடம் கொடுத்த பாலு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கும்பலுக்குத் தலைமை வகித்த செந்தில்குமாரும் இவர்கள் தங்கியிருந்த கொட்டகைக்குச் சொந்தக்காரரான பாலுவும் சில ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் ஒன்றாக வேலை பார்த்து வந்துள்ளனர். அந்த நட்பின் அடிப்படையில் பெண்ணாடம் பகுதியில் கொள்ளையடிப்பதற்காகத் திட்டம் போட்டு குழுவாக இங்கு வந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. தற்செயலாக இந்த கும்பல் குறித்து அப்பகுதி இளைஞர்கள் கொடுத்த ரகசிய தகவலால் மிகப்பெரிய கொள்ளை திட்டம் முறியடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்