
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் ஹமாஸ் அமைப்பின் கடைசி நபரை அழிக்கும் வரை ஓயமாட்டோம் என்று சபதம் எடுத்துள்ள இஸ்ரேல் காசாவை நிர்முலமாக்கிகொண்டிருக்கிறது. இதனிடையே போரின் காரணமாக உயிருக்கு பயந்து ரபா நகரில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக அழித்தொழிக்க ரபா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் நிச்சயம் படையெடுக்கும் என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு தெரிவித்துள்ளார். ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் ரபா நகரில் அடைக்கலம் புகுந்துள்ள நிலையில், இஸ்ரேல் ராணுவம் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தினால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.