விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கீழ உப்பிலுகுண்டு கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பாறை உடைக்கும் பணியில் ஈடுபட்டபோது, வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கல்குவாரியை மூட வேண்டும் என்று பொதுமக்கள் மதுரை, தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தினர். இதனிடையே குவாரி உரிமையாளர் சேதுவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று காலை வெடிப்பொருள் சேமிப்பு கிடங்கின் உரிமையாளர் ராஜ்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வெடி விபத்து தொடர்பாக 4 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ராம்ஜி, ராமமூர்த்தி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் குவாரி நிர்வாகம் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளது. ரொக்கமாக ரூ.50 ஆயிரமும், காசோலையாக ரூ.11.50 லட்சம் உயிரிழந்தவர்களின் குடுமத்தினரிடம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் அனைத்தையும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கல்குவாரி வெடி மருந்துகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்து அறிக்கையை அளிக்க ஆட்சியை உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகமாக உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா உள்ளாட்சி பிரதிநிதிகள், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் உள்ளிட்டவர்களுடன் ஆலோனை கூட்டம் நடத்தினர். இந்தக் கூட்டத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரி வெடி மருத்துகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா? என்று கனிம வளத்துறை, காவல்துறை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு தெரிவித்துள்ளார்.