பொங்கல் திருநாளை தமிழகம் மட்டுமின்றி தமிழர்கள் வாழும் நாடுகளிலும் கொண்டாடி வருகின்றனர். தை மாதம் முழுவதும் கோலாகலமாகவே இருக்கும். அதேபோல் பல ஊர்களில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. வழுக்கு மரம் ஏறுதல் போட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரபலமான போட்டி. உயரமான கம்பத்தின் உயரத்திற்கு ஏற்ப வீரர்களின் எண்ணிக்கையும் அமையும். கிரீஸ், எண்ணெய் தடவிய வழுக்கு மரத்தின் உச்சியில் உள்ள பணமுடிப்பை எடுக்க ஒருவர் மீது ஒருவராக 5 முதல் 7, 8 பேர்கள் வரை ஏறி எடுக்க அனுமதிக்கப்படுவர்.
கயிறு வழியாக ஏறக்கூடாது, சட்டை அணிந்து ஏறக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும். 50 அடி உயரம் கொண்ட மரங்களில் கூட குழுவாக ஏறி பரிசுத் தொகையை எடுத்துச் செல்வது வழக்கம். இதேபோல ஆலங்குடி அருகே உள்ள சம்மட்டிவிடுதி கிராமத்தில் அங்குள்ள பள்ளி வளாகத்தில் இளைஞர்கள் சார்பில் நேற்று மாலை வழுக்கு மரம் நடப்பட்டு தயாராக இருந்தது. அதே ஊரைச்சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் விஜயகுமார் (38) வழுக்கு மரம் சாயாமல் இருக்க பாதுகாப்பிற்காக இழுத்து கட்டப்பட்டிருந்த ஒரு கயிற்றில் ஏறியபோது கீழே நின்றவர்கள் கூச்சல் போட்டு இறங்கச் சொன்னதையும் கேட்காமல் மரத்தின் உச்சியைத் தொட முயன்றபோது தவறி கீழே விழுந்தார். பேச்சு மூச்சின்றி கிடந்தவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். சம்பவம் குறித்து சம்மட்டிவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.