சென்னையில் பறக்கும் ரயில் மேம்பாலம் சரிந்து விபத்து நிகழ்ந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆதம்பாக்கத்தில் இருந்து பரங்கிமலை செல்லும் வகையில் பறக்கும் ரயில் வழித்தடத்திற்கு மேம்பாலம் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர்ப் பகுதியில் பறக்கும் ரயில் சேவைக்கு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அப்பகுதியில் இரு தூண்களுக்கு இடையே உள்ள பகுதி இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தின் போது சம்பவ இடத்தில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த விபத்து சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் பாலம் இடிந்து விபத்துக்குள்ளான இடத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''மார்ச் மாதம் இது மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட இருந்த திட்டம். இந்த சூழ்நிலையில் 500 டன்னுக்கு மேற்பட்ட எடை கொண்ட ஒரு பில்லர் பொருத்துகின்ற போது தவறுதலாக கீழே விழுந்து விட்டது. பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் விபத்து நிகழ்ந்துள்ளது. மேலிருந்து பார்க்கும் பொழுது சின்னதாக தெரிகிறது. இப்பொழுது பார்த்தால் பெரிதாக இருக்கிறது. இதனால் மே, ஜூன் மாதங்களில் தான் இந்த பணி முடியும். துரதிர்ஷ்டவசமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது'' என்றார்.