புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள டிஎஸ்பிக்களுக்கு பணி ஆணை வழங்கும் விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட டிஎஸ்பிக்களுக்கு சென்னை வண்டலூரில் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா நடைபெற்றது. பயிற்சியை முடித்த 86 டிஎஸ்பிக்களில், 40 பேர் பெண்கள், 46 பேர் ஆண்கள் என்ற நிலையில் இதற்கான பணி ஆணைகளை வழங்குவதற்கான இந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்களும், எம்.எல்.ஏக்கள் சிலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை தமிழ்நாடு முதல்வர் ஏற்றுக்கொண்டார்.
அதன்பின் விழா மேடையில் பேசிய மு.க.ஸ்டாலின் ''மக்களை பாதுக்காக்கும் பணியில் டிஎஸ்பிக்கள் தங்களை ஒப்படைக்க வேண்டும். குற்றங்களுக்கு தண்டனை வாங்கித்தரும் பணியாக காவல்துறை இருக்காமல் குற்றங்களை தடுக்கும் துறையாக காவல்துறை இருக்கவேண்டும் என்பதே எனது ஆசை. அந்த ஆசை நிறைவேறும் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது. தொழில்நுட்பம் வளர வளர அதனை குற்றம் செய்வோர் பயன்படுத்தி வருகிறார்கள். லுங்கி கட்டிக்கொண்டு கழுத்தில் கர்சீஃப் கட்டிக்கொண்டிருந்தால் வழிப்பறி திருடன் என்பதை போல ஒரு காலத்தில் பத்திரிகைகளில் கார்ட்டூன் போடுவார்கள். ஆனால் இப்பொழுது இணைய வசதி வந்தபிறகு அடையாளமற்ற குற்றவாளிகள் பெருகிவிட்டனர். இதனை தடுக்க தமிழக காவல்துறை நவீனமயமாக வேண்டும். பொறுப்பேற்றுள்ள துணை கண்காணிப்பாளர்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக சொல்லத்தக்க மனிதனாக உங்கள் காவல்துறை தலைமை இயக்குனரே இருக்கிறார். 1987 ஆம் ஆண்டு கோபிச்செட்டிபாளையத்தில் உதவி கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற சைலேந்திரபாபு இன்று தமிழ்நாடு காவல்துறை தலைவராக உயர்ந்திருக்கிறார் என்றால் அதற்கு அவரது உழைப்பும், முயற்சியும்தான் அமைந்திருக்கிறது'' என்றார்.