திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே இருக்கும் ப.விராலிப்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை கருப்பணசாமி கோவில் ஆடித் திருவிழா நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது.
இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆடுகளை நேர்த்திக்கடனாக செலுத்தி வருகின்றனர். ஆண்டு முழுவதும் நேர்த்திக்கடனாக செலுத்தப்படும் ஆடுகள் கோயில் நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு ஆடி திருவிழா அன்று கோட்டை கருப்பணசாமிக்கு பலியிடப்படுகின்றன.
நேற்று நடந்த திருவிழாவில் தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நேற்றும் நூற்றுக்கணக்கான ஆடுகளை பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தினர். மொத்தம் நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்ட 3 ஆயிரம் ஆடுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் பலியிட்டப்பட்டது. இரவு மட்டும் நடக்கும் இக் கோவில் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்க முடியும். பெண்களுக்கு அனுமதி இல்லை.
பலியிடப்பட்ட ஆடுகள் அனைத்தும் சமைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். வத்தலகுண்டு போக்குவரத்து பணிமனை சார்பில் சிறப்பு பேருந்துகள் இரவு முழுதும் இயக்கப்பட்டன.